சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது!!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த கர்மன்ப்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரமேஷுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நஷ்டத்தை சரிகட்ட தனது மைத்துனர். பூனச்சந்திரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து ரமேஷ், பூர்ண சந்திரனுடன் சேர்ந்து கலப்படம் செய்யப்பட்ட அல்ட்ரா சோல்ம் என்ற ஆபத்தான போதை மாத்திரைகளை உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள பல மருந்து நிறுவனங்களில் இருந்து வரவழைத்தனர். இதற்கு அம்பர்பேட்டை சேர்ந்த ராகவ ரெட்டி (வயது 55) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தார். மருந்து கடைகளில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகளை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனர்.
மேலும் இவர்களுக்கு மருந்து நிறுவனங்களில் இருந்து சட்ட விரோதமாக மருந்துகளை கடத்தி வருவதற்கு ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமணன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நதீம், டெல்லியை சேர்ந்த அருள் சவுத்ரி ஆகியோர் உதவி செய்து வந்தனர். இதன் மூலம் ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார். இவர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆபத்தான போதை மருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் அடிமையாகினர். போதை மருந்து விற்பனை குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து விற்பனை குறித்து துல்லியமான தகவலை பெற்றனர்.
ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் எங்கு எங்கு போதை மருந்து விற்பனை செய்கிறார்கள் என கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மலாக் பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த ரமேஷ், ராகவா ரெட்டி ஆகியோரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.