நான் திருடர்களை பிடித்து கொடுத்தால் பணத்திற்காக விட்டுவிடுகிறார்கள்.. சாலையில் படுத்து போராடிய போலீஸ்காரர்!!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் போலீஸ்காரர் ஒருவர் திடீரென சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்திய வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் ஊர்க்காவல் படை வீரர் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்தின் முன்னால் படுத்துக்கொண்டு போராடுகிறார். அவரை சக போலீஸ்காரர் எழுந்திருக்கும்படி உதைப்பதுபோல் தெரிகிறது. எனினும் அந்த வீரர் எழுந்திருக்காமல் அடம்பிடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். “நான் கஷ்டப்பட்டு திருடர்களை பிடிக்கிறேன். ஆனால் எனது காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீஸ்காரர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த திருடர்களை விட்டுவிடுகிறார்கள்.
என்னால் தாங்க முடியவில்லை” என அந்த போலீஸ்காரர் கூறுகிறார். இந்த சம்பவம் ஜலந்தரின் போக்பூர் பகுதியில் உள்ள பதான்கோட் நெடுஞ்சாலையில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் போக்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். சம்பவத்தன்று வழக்கு தொடர்பாக ஒரு நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து லாக்கப்பில் அடைத்துள்ளார். நேற்று காவல் நிலையம் சென்று பார்த்தபோது அந்த கைதியை காணவில்லையாம். சக போலீஸ்காரர்களிடம் கேட்டபோது, மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், நெடுஞ்சாலை சந்திப்பில் நான்குபுறமும் கயிறு கட்டி போக்குவரத்தை நிறுத்தி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சக போலீஸ்காரர் அந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டுள்ளார். இதனையடுத்து சாலையில் வாகனங்களின் முன்பு படுத்து போராடியிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், போலீஸ்காரரின் குற்றச்சாட்டை காவல் நிலைய பொறுப்பாளர் சுக்ஜித் சிங் மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட கைதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், போராட்டம் நடத்திய அவரை சக போலீஸ்காரர் காலால் உதைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.