;
Athirady Tamil News

பா.ஜ.க.வுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்- செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி!!

0

கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் நடத்திய அமைதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் இறந்தனர். இதன் நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு மாநில தணிக்கை பொதுக்குழு தலைவருமான செல்வப் பெருந்தகை எம். எல்.ஏ., மாநில காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் ஆகியோர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- உரிமைக்காக போராடிய போராளிகள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். உயிர்நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செலவில் உயர்நீத்த 17 பேருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான ஏற்பாட்டை செய்வோம். மணிப்பூரில் அங்குள்ள மக்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். மணிப்பூர் மக்களின் உரிமையை மீட்டெடுப்பதுதான் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய பணியாக உள்ளது. ஜாதியாக, மதமாக, இனமாக மக்களை பிரித்தாலும் பா.ஜ.க.விற்கு விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் ஒருபோதும் இந்திய மக்கள் ஏமாறமாட்டார்கள்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேட்டால் அதற்கு ஆளுநர், சி.பி.ஐ. விசாரணை நடப்பதாக மறுக்கிறார். இதே நடைமுறைதான் அமைச்சர் பொன்முடிக்கும் பொருந்தும். நீதிமன்ற நிலுவையில் இருக்கும் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை. மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள். குறிப் பாக காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.