காதலனிடம் ‘வீடியோ காலில்’ பேசி பெண் போலீஸ் தற்கொலை: திருமணமான போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த முடிவு!!
சென்னை, தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தவர் சுகந்தி (வயது25). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். கடந்த 2017-ம்ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது சகோதரர் சுப்புராயனுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு வந்த சுகந்தி திடீரென சமையலறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து சுகந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காதலனுடன் சுகந்தி வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட சுகந்தி ஏற்கனவே திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றும் போது உடன் பணிபுரிந்து வந்த போலீஸ் காரர் விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த விஷ்ணு தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு சுகந்தியை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவிநாசி போலீஸ் நிலையத்தில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் விஷ்ணுவுக்கும், சுகந்திக்கும் இடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு வந்தது. அதே போல நேற்றும் அவர்கள் வீடியோ காலில் பேசிக் கொண்டு இருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து விஷ்ணு இணைப்பை துண்டித்துவிட்டதாக தெரிகிறது. சுகந்தி பலமுறை தொடர்பு கொண்டும் காதலன் விஷ்ணு அவரது அழைப்பை எடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சுகந்தி விஷ்ணுவின் நண்பரான மற்றொரு போலீஸ்காரர் ஒருவரை தொடர்பு கொண்டு “நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என்று கூறி விட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
சுகந்தி மீது ஏற்கனவே உயர் அதிகாரிகள் மூலம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சென்னைக்கு இட மாற்றம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலன் விஷ்ணுவுடன் செல்போனில் பேசியபோது என்ன பிரச்சினை என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சுகந்தியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சுகந்தியின் காதலனான போலீஸ்காரர் விஷ்ணு மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த கோயம்பேடு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதன் பின்னரே சுகந்தியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.