;
Athirady Tamil News

அடுக்குமாடி வீடுகளில் விண்ணப்பம் வழங்குவதில் சிரமம்- ரேஷன் கடை ஊழியர்கள் படி ஏற முடியாமல் தவிப்பு!!

0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள். இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன. இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள். எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை. காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.