முன்னாள் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கையால் மிசோரமில் இருந்து வெளியேறும் மைதேயி சமூகத்தினர்!!
மணிப்பூரின் பக்கத்து மாநிலமான மிசோரத்திலும் இந்த இனமோதலின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. மிசோரம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் உருவான மிசோரம் தேசிய முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு, அரசின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையின்படி அமைதி வாழ்விற்கு திரும்பியது. இந்த அமைப்பை சேர்ந்தவர்களை கொண்டது மிசோரம் மாநிலத்தின் பாம்ரா சங்கம். இந்த அமைப்பு, மணிப்பூரின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களை “மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்” என எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அறிக்கையில், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், 2 பெண்களை ஆடையின்றி அணிவகுத்து அழைத்து சென்ற சம்பவத்தை கேள்விப்பட்டதும் மிசோரம் இளைஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் மிசோரத்திலுள்ள மைதேயி சமூகத்தினர் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்.
மணிப்பூரில் உள்ள குகி இன சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறையால் மிசோ உணர்வுகள் ஆழமாக புண்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள மைதேயி இனத்தவர்கள் மீது ஏதேனும் வன்முறை நடந்தால், அதற்கு அவர்களே பொறுப்பு. இவ்வாறு அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த முறையீடு மணிப்பூரைச் சேர்ந்த மைதேயி மக்ககளுக்கு மட்டுமே என்றும், வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர். இதயடுத்து மிசோரமில் இருந்து மைதேயி சமூகத்தினர் வெளியேறுகின்றனர். மிசோரமின் ஐசால் நகரில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த 66 பேரில் 56 பேர் மைதேயில் சமூகத்தினர்.
மேலும் மைதேயிகள் 300-க்கும் மேற்பட்டோர் மிசோரத்தில் இருந்து அசாமின் பாரக் பள்ளத்தாக்கு சாலை வழியாக வெளியேற திட்டமிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, மிசோரம் அரசு, தலைநகர் ஐசாலில் மைதேயி சமூகத்தினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மைதேயி இனத்தை சேர்ந்தவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மிசோரம் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மைதேயி இனத்தவரின் பாதுகாப்பு குறித்து மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்கிடம் மிசோரம் முதல்-மந்திரி ஜோரம்தங்கா உறுதியளித்தார். மணிப்பூர் அரசு, மிசோரம் மற்றும் மத்திய அரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. பெரும்பாலும் மணிப்பூர் மற்றும் அசாமைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மைதேயி சமூகத்தினர் மிசோரமில் வாழ்கின்றனர்.
மணிப்பூரில் இருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 12000 குகி இனத்தவர்கள் மிசோரத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனிடையே மிசோரம் தேசிய முன்னணி அமைப்பினருடன் மிசோரம் அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மைதேயிகளுக்கு அறிவுறுத்தியதாகவும், மைதேயிகளை வெளியேற தாங்கள் கட்டளையிடவில்லை என்று அந்த அமைப்பினர் விளக்கம் அளித்தநர். இதை தொடர்ந்து மிசோரமில் இருந்து மைதேயிகள் வெளியேறவேண்டாம் என்றும், அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் மிசோரம் அரசு கூறியுள்ளது.