மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன் பிறகு அங்கு வன்முறை நீடித்து வருகிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் 4-ந்தேதி மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அதே தினத்தில் மேலும் 2 பழங்குடியின பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தின்போது சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் செரோ என்ற கிராமம் உள்ளது. கலவரத்தில் இந்த கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த கிராமத்தில், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சுராசந்த்சிங் மனைவியான 80 வயதான இபெடோம்பி வசித்து வந்தார். 80 வயதான அவரை வீட்டுக்குள் வைத்து ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து எரித்ததகாவும், இந்த சம்பவம் மே மாதம் 28-ந்தேதி அதிகாலையில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவரது பேரன் பிரேம்காந்தா அதிர்ஷ்டவசமாக தப்பினார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.