சீரியல் கில்லர் கொன்ற பெண்ணின் உடல் எங்கே? 3 ஆண்டுகள், ரூ.1,140 கோடி செலவழித்தாலும் கிடைக்குமா?!!
ஏழு மாதங்களுக்குப் பிறகு, கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயிடம் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அவரை ஒரு சீரியல் கில்லர் கொன்றதை அறிந்தார்.
அது மட்டுமல்ல. அவரது உடல் கனடாவில் அவர் வசித்துவந்த நகரமான வின்னிபெக்கில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டது. இப்போது அங்கே டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது.
கேம்ப்ரியா ஹாரிஸின் தாய் மட்டும் இந்த கொலையில் பாதிக்கப்பட்டவர் எனக் கருத முடியாது. அந்த தொடர் கொலையாளி மேலும் மூன்று பூர்வக்குடி பெண்களையும் கொலை செய்துள்ளார். மார்சிடெஸ் மைரோன், ரெபேக்கா கான்டோயிஸ் மற்றும் பஃபலோ வுமன் (அவரது அடையாளம் தெரியாததால் சமூகத்தால் அவருக்கு வழங்கப்பட்ட பெயர்) ஆகியோரும் இந்தக் கொலையாளியால் கொலை செய்யப்பட்டனர்.
காம்ப்ரியா ஹாரிஸின் தாயாரின் உடலைத் தேடுவது சாத்தியமில்லை என்று காவல் துறையினர் கூறிவிட்டனர். ஆனால் அது சாத்தியம் என்று சமீபத்தில் கனடா அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலைத் தேட சுமார் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்றும், அதற்கு 184 மில்லியன் கனடா டாலர் செலவாகும் என்றும் தெரியவந்துள்ளது. எனவே அவரது உடலைத் தேடுவது குறித்து அரசு தீவிர பரிசீலனை செய்துவருகிறது. ஆனால் இது நடக்குமா அல்லது நடக்காதா என்று கேம்ப்ரியாவால் எந்த முடிவையும் எட்டமுடியவில்லை.
கனடாவின் பூர்வீக பெண்கள் சங்கம் கடந்த 30 ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டதாகக் கருதும் 4,000 க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்களின் பெயர்களைக் கண்டறிந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், கனடா அரசால் மேற்கொள்ளப்பட்ட பொது விசாரணையில், இந்த பெண்கள் கனடாவில் நடந்த இனப்படுகொலைக்கு பலியானதாகத் தெரியவந்துள்ளது. காலனித்துவம் மற்றும் காலனித்துவ சித்தாந்தங்களில் வேரூன்றிய அந்நாட்டு அரசின் செயலற்ற தன்மையின் காரணமாக இது போன்ற இனப்படுகொலை தூண்டப்பட்டது.
கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயின் கதையை சோகத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
“டிசம்பர் 1, 2022 அன்று எனக்கு அழைப்பு வந்தது. அவர் வின்னிபெக் காவல் துறையைச் சேர்ந்தவர்.
அவர்கள் என்னை ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் உள்ளே நுழைந்தபோது, என் குடும்பம் முழுவதும் அங்கே இருந்தது. என் சகோதரிகள், என் அத்தைகள், என் மாமாக்கள், என் உறவினர்கள் மற்றும் என் தாயைப் பற்றி பற்றி ஆச்சரியப்பட்டவர்கள் மற்றும் அவரைத் தேடியவர்கள் என அனைவரும் இருந்தனர்.
மேலும், கொலைகளைத் துப்பறியும் நபர்கள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறியும் காவல் பிரிவினரும் அங்கே இருந்தனர்.
மே மாதத்தில் நாங்கள் தங்குமிடங்கள் மற்றும் சிகிச்சை மையங்களுக்குச் சென்றபோது எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. இரண்டு மாதங்களாக அவரைக் காணவில்லை.
மோர்கன் ஹாரிஸ், ஒரு பழங்குடிப் பெண். எளிதில் தாக்கப்படும் ஆபத்துள்ள, வீடற்றவராக இருநத என் அம்மா காணாமல் போனார்.
போலீஸ் நிலையத்தில் அவர்கள் எங்களை எல்லாம் உட்கார வைத்து தடயவியல் சோதனைகள் மூலம் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதைத் தீர்மானிக்க முடிந்தது என்று சொன்னார்கள்.
ஒரு குப்பை கிடங்கின் புகைப்படங்களை என்னிடம் காட்டினார்கள். “இங்கே பாருங்கள். உங்கள் அம்மாவின் உடல் இந்த குப்பை மலையின் கீழ் இருக்கிறது. உங்களால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் அவரைத் தேடப் போவதில்லை என்றுதான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது,” என்று சொல்வது போல் இருந்தது.
கேம்ப்ரியா ஹாரிஸ் டிசம்பரில் தனது தாயார் கொலை செய்யப்பட்டு குப்பை கிடங்கில் வீசப்பட்டதை அறிந்தார்.
என் பெயர் கேம்ப்ரியா ஹாரிஸ் மற்றும் என் ஆன்மீக பெயர் வெஸ்ட் ஃப்ளையிங் ஸ்பாரோ விமன் (West Flying Sparrow Woman).
நான் வின்னிபெக்கில் பிறந்து வளர்ந்தேன். ஆனால் எனது குடும்பம் லாங் ப்ளைன் ஃபர்ஸ்ட் நேஷனின் (Long Plain First Nation) ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
நான் பிறந்து பதினைந்து மாதங்களுக்குப் பிறகு என் சகோதரி கிரா பிறந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் சகோதரி ஜானெல்லும் தம்பி சேத்தும் பிறந்தார்கள்.
எனது ஆரம்ப காலத்தில் வாழ்க்கை நன்றாக இருந்தது. என் வீடு ஒரு நாளும் காலியாக இருந்ததில்லை. என்னை எப்போதும் அத்தைகள், மாமாக்கள் மற்றும் பிளாக்கில் வசிக்கும் எனது உறவினர்கள் அனைவரும் சூழ்ந்திருப்பார்கள்.
என் வீட்டில் இருந்தவர்கள் சிரிக்காத, நாளே இல்லை.
ஆனால் எனக்கு 6 வயதாக இருந்தபோது ஒரு வார இறுதியில், நான் வீட்டிற்கு வந்தேன். அப்போது நான் போலீஸ் அதிகாரிகளால் சூழப்பட்டேன்.
அவர்கள் என் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் அல்லது ஏதோ என் அம்மாவை கைது செய்ய முயன்றிருக்கலாம், அன்றுதான் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் என்னை அழைத்துச் சென்றனர்.
இது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது.
நான் ஒரு தங்குமிடத்தில் நீண்ட நேரம் தூங்கப் போகிறேன் என்று அவர்கள் சொன்னார்கள். ஆம், எனக்கு 18 வயது ஆன பின் தான் அங்கிருந்து மீள முடிந்தது.
கேம்ப்ரியாவின் தாயார் வீடற்ற நிலையில் தெருக்களில் வசித்து வந்தார். அவருக்கு மனநலப் பாதிப்புக்களும் இருந்தன.
நீண்ட சமவெளியின் லாங் ப்ளைன் ஃபர்ஸ்ட் நேஷனின் உறுப்பினர்களான எனது மூதாதையர்கள் உணவுக்கே போராடும் நிலை ஏற்பட்டதால் அங்கிருந்து தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
சாலைப்பகுதியின் ஓரத்தில் வசித்து வந்த அவர்கள், அங்கே கட்டுமானப் பணிகள் தொடங்கினால் வேறு இடங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சொல்லப் போனால் அவர்கள் ஒரு குப்பைக் கிடங்கில் வாழ்ந்தனர்.
என் பாட்டி ரோஸ் உறைவிடப் பள்ளியில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் .
அதனால்தான் என் பாட்டி போதைக்கு அடிமையாகி அதற்கே பலியாகிவிட்டார்.
என் அம்மாவும் வலி மாத்திரைகள் சாப்பிடுவதற்கு அடிமையாக இருந்தார். இந்த மருந்துகள் அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றை சாப்பிட்டால் தான் அவரால் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடியும்.
இது பல தலைமுறைகளாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு அதிர்ச்சியாகத் தொடர்ந்தது.
எனக்கு சுமார் 11 அல்லது 12 வயது இருக்கும் போது என் அம்மாவுக்கு கடுமையான மனநலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தெருக்களில் ஒரு போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் வீடற்ற தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் தான் இருந்தேன்.
ஆனால் பின்னர் அவருக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் தெருக்களுக்குத் திரும்பினார். அவர்கள் எங்களை மீண்டும் சுறாக்களிடம் ஒப்படைத்து விட்டு, நாங்கள் நலமாக இருக்கிறோம் என நம்பினார்.
குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட தாயின் உடலை மீட்க கேம்ப்ரியா ஹாரிஸ் தொடர்ந்து போராடி வந்தார்.
திடீரென என் அம்மாவைக் காணவில்லை.
பாலங்களின் கீழே நாங்கள் தேடிப்பார்த்தோம். அங்கு யாரும் வசிக்கக் கூடாத தற்காலிக முகாம்கள் இருந்தன. யாரும் செல்லக்கூடாத பார்களுக்குள் நாங்கள் சென்றோம். அங்கே பயங்கரமான வீடுகள், வன்முறைக் கும்பல்கள் வசித்து வந்த கட்டடங்கள், கைவிடப்பட்ட கட்டுமானங்கள் என ஏராளமாக இருந்தன.
ஆனால் அந்த பயங்கரமான இடங்கள் எவையும் எங்களைப் பயமுறுத்தவில்லை. எனவே நாங்கள் எங்கு வேண்டுமானாலும் கதவைத் தட்டினோம்.
இறுதியாக, மே மாதம் ரெபேக்கா கான்டோயிஸ் கொலை செய்யப்பட்டதை அறிந்தோம். அவருடைய உடல் மற்றொரு குப்பைக் கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு தொடர் கொலைகாரன் அப்பகுதித் தெருக்களில் சுற்றித் திரிந்திருப்பான் என்ற எண்ணம் மிகவும் கவலையாகவும் அதிர்ச்சியாகவும் என்னை வருத்திக்கொண்டே இருந்தது.
என் அம்மா அவனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் என்று நான் கவலைப்பட்டேன்.
துப்பு எதுவுமின்றி மாதங்கள் கடந்தன.
டிசம்பர் மாதம் தான், எங்களுக்கு காவல்துறையில் இருந்து செய்தி கிடைத்தது.
அவருடைய அஸ்தி என்னிடம் இல்லை என்பதே என் வேதனையின் பெரும்பகுதி. என் அம்மா இறந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவருடைய உடல் எங்கே?
அவர் கொல்லப்பட்டாலும், அவரது உடல் மீட்கப்பட வேண்டும். அதே போல் மார்சிடிஸ் மைரனும் மீட்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்தக் குப்பைக் கிடங்கு உண்மையில் ஒரு பெயரற்ற கல்லறையாகவே பார்க்கப்படுகிறது.
குப்பத்துக்குச் சென்று விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், இப்போது என் அம்மா இருக்கும் இடத்தில் இருப்பது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் எதையும் தேட முடியாது. இந்தக் கையறு நிலை என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது.
உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டில் நான் கர்ப்பமாகிவிட்டேன். உண்மையிலேயே பயமாக இருந்தது. என் அம்மா என்னை 18 வயதில் பெற்றெடுத்தார். அது நான் கர்ப்பமான வயது. என் சகோதரர்களுடன் நடந்த சம்பவங்களால் எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நான் மிகவும் கவலைப்பட்டேன்.
நான் டீன் ஏஜ் பருவத்தில் கர்ப்பம் தரித்ததற்காக என் மகள் என்னிடமிருந்து பறிக்கப்படப் போகிறாள் என்ற பயம் என்னுள் விதைத்து வளர்ந்தது.
தலைமுறை தலைமுறையாக எனக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் எனது வாழ்க்கையை அதிர்ச்சிகரமான நிலையிலேயே வைத்திருந்தது. ஆனால், நான் கடந்து வந்த பாதையைப் போன்ற ஒரு பாதையை என் மகள் ஒருபோதும் கடந்து செல்லக்கூடாது என்பதை உறுதி செய்வதே எனது மிகப்பெரிய வெற்றியாகும்.” என்று அவர் கூறுகிறார்.