;
Athirady Tamil News

உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷியா தாக்குதல்: 17-ம் நூற்றாண்டு தேவாலயம் தகர்ப்பு !!

0

கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் துணையுடன், இன்று வரை உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர்கள் பலியாவதும், கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் சேதமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ரஷியா தாக்குதலில் உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள ஒரு மிக பெரிய கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தேவாலயம் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது. 1794-ல் கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயமான டிரான்ஸ்ஃபிகரேஷன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதி என வர்ணிக்கப்பட்ட நகர வளாகத்திற்குள் இந்த தேவாலயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1936-ல் சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சியில் இடிக்கப்பட்ட இந்த தேவாலயம், 1990-களில் சோவியத் ஒன்றியம் உடைந்த காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது. கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியதும் நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ரஷியாவின் நட்பு நாடான பெலாரஸின் அதிபரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்திருக்கும் வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுக்கெதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் தோல்வியை கண்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை போர் குற்றம் என கூறியிருக்கும் உக்ரைன், இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:- ரஷியா இதற்கு நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். உலக மக்கள் தீவிரவாத தாக்குதலை வழக்கமான சம்பவமாக பழகி கொள்ள நாம் அனுமதிக்க முடியாது.

ரஷியாவின் இலக்கு நகரங்களோ, கிராமங்களோ அல்லது பொது மக்களோ இல்லை. மனிதகுலமும் ஐரோப்பிய கலாசாரமும்தான் அவர்களின் தாக்குதல் இலக்கு. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். அதிக அளவில் சேதம் அடைந்த தேவாலயத்தின் இடிபாடுகளிலிருந்து மொசைக் துண்டுகள் பணியாட்களால் சுத்தம் செய்யப்படுவது அங்கிருந்து வெளிவரும் காட்சிகளில் தெரிந்தது. ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என தெரிகிறது. சிலை சேதத்திற்குள்ளாகியிருக்கிறது. தேவாலயத்தின் மீது நேரடியாக நடைபெற்ற தாக்குதல் இது. மூன்று உயர்நிலைகள் சேதமடைந்திருக்கிறது என குறிப்பிட்ட பாதிரியார் ஒருவர் கூறியுள்ளார். ரஷியாவிற்கெதிரான தீவிரவாத செயல்களுக்கான பயிற்சி கூடமாக இந்த தேவாலயம் இருந்ததாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் அந்நகர சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.