;
Athirady Tamil News

இந்திய இளைஞரை மணக்கும் போலந்து பெண் – டிக்டாக், இன்ஸ்டாகிராம் வழியே காதல் வளர்த்தது எப்படி?!!

0

“என்னை விட்டால் ஷதாப்பை நாளைக்கே திருமணம் செய்து கொள்வேன்.”

சமீபத்தில் போலந்தில் இருந்து இந்தியா வந்திருக்கும் பார்பரா போலாக் இவ்வாறு சொன்னார்.

44 வயதான பார்பராவின் இந்த வார்த்தைகளைக்கேட்டு அவரது இந்திய காதலர் ஷதாப் ஆலமின் முகம் மலர்ந்தது.

”வருங்காலத்தில் எந்த விதமான பிரச்சனையும் வராமல் இருக்க நாங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம்,”என்று ஷதாப் ஆலம் கூறுகிறார்.

பார்பரா போலாக் தனது காதலர் ஷதாப் ஆலமை சந்திக்க ஜூலை இரண்டாவது வாரத்தில் ஹஸாரிபாக் வந்துள்ளார்.

ஜூன் 26 ஆம் தேதி அவர் தனது ஏழு வயது மகள் அனியா போலாக்குடன் போலந்தில் இருந்து புது டெல்லி வந்தார். பின்னர் ஷதாப்புடன் டெல்லியின் சுற்றுலா தலங்களை பார்க்கச்சென்றார்.

“நாங்கள் டெல்லியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது மக்கள் பார்பரா மற்றும் அனியாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர்,” என்று ஷதாப் குறிப்பிட்டார்.

பார்பராவை நான் சந்தித்தபோது அவர் முதலில் என்னைப்பார்த்து இஸ்லாமியர்கள் செய்வது போல சலாம் செய்தார்.

இதை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள் என்று நான் கேட்டபோது, ’கிராமத்திற்கு வந்த பிறகு’ என்று அவர் பதில் அளித்தார். “ஆரம்பத்தில் கிராமவாசிகள் எங்களை சந்திக்க வந்த போது ஷதாப் ’சலாம்’ என்று சொல்லி வணக்கம் சொல்வதைக் கேட்டேன். அன்றிலிருந்து என்னை சந்திக்க வரும் அனைவரையும் நானும் அதேபோல வாழ்த்துகிறேன்.” என்றார் அவர்.

பார்பராவுடன் நான் நடத்திய மீதமுள்ள உரையாடல் ஆங்கிலத்தில் இருந்தது. அவர் சில கேள்விகளுக்கு ஆங்கிலத்திலும் சில கேள்விகளுக்கு போலிஷ் மொழியிலும் பதிலளித்தார். அதை ஷதாப் மொழி பெயர்த்தார்.

இந்தியாவை பாராட்டிய பார்பரா, “அதிதி தேவோ பவா’(விருந்தினர்கள் கடவுள் போன்றவர்கள்) என்ற தத்துவத்தை கடைப்பிடிக்கும் அழகான நாடு இது. இங்குள்ள மக்கள் மிகவும் நட்புடன் இருக்கிறார்கள். இங்குள்ள பழங்கள் மிகவும் சுவையானவை. இங்குள்ள உணவு எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

” விடுமுறையை இங்கு கழிப்பதில் என் மகளும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவள் ஷதாப்புடன் மிகவும் நெருக்கமாகி விட்டாள். இப்போதே அப்பா என்று அழைக்கத் தொடங்கி விட்டாள். இருவரும் சேர்ந்து நிறைய விளையாடுவார்கள்,” என்று பார்பரா தனது மகள் பற்றித்தெரிவித்தார்.

விசிட்டர் விசாவில் இந்தியா வந்துள்ள பார்பரா, தான் ஒரு கிராமத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்கிறார்.

“இந்த குட்ரா கிராமத்தின் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் இங்குள்ள வீடுகள் சிறிதாக உள்ளன. போலந்தில் வீடுகள் பெரிதாக இருக்கும். ஆனாலும் ஷதாபுடன் இங்கு வாழ்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

மகாராஷ்டிரா கல்லூரியில் பட்டம் பெற்ற ஷதாப், தான் ஒரு நல்ல டேன்ஸர் என்று கூறுகிறார்.

“நான் டான்ஸ் வீடியோ எடுத்து டிக்டாக்கில் போடுவேன். அதைப் பார்த்து பார்பரா என்னை ஃபாலோ செய்யத்தொடங்கினார். பார்பரா பலமுறை எனக்கு நேரடி மெஸேஜ் அனுப்பினார். ஆனால் அவரது அக்கவுண்ட் டிபியில் வெளிநாட்டுப் பெண்ணின் முகத்தைப் பார்த்து, இது மோசடிக் கணக்காக இருக்குமோ என்று பயந்துவிட்டேன். அதனால் நான் பதிலளிக்கவில்லை. ஆனாலும் அவர் என்னை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றார்,”என்று ஷதாப் குறிப்பிட்டார்.

“டிக்டாக் நிறுத்தப்பட்ட பிறகு நான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யத் தொடங்கினேன். பார்பரா அங்கும் என்னை ஃபாலோ செய்தார். ஒரு நாள் நான் நேரலையில் இருந்தேன். பார்பராவும் அங்கு இருந்ததை பார்த்தேன். அவர் என்னைத் தொடர்பு கொள்ள விருப்பம் தெரிவித்தார். என் கைபேசிஎண்ணை அவருடன் பகிர்ந்து கொண்டேன். பிறகு வாட்ஸ்அப் மூலம் எங்கள் உரையாடல் தொடங்கியது. இது பொதுமுடக்கத்திற்கு முன்பு நடந்தது.”

“பார்பரா அடிக்கடி சிவப்பு ரோஜாக்களை அனுப்புவார். அதைப் பார்த்து எனக்குள் காதல் உணர்வு ஏற்பட்டது. பிறகு ஒரு நாள் பார்பரா தன் காதலை வெளிப்படுத்தினார், அதை நான் ஏற்றுக்கொண்டேன்,” என்று ஷதாப் குறிப்பிட்டார்.

“நான் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தேன். ஆனால் அதில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பார்பரா எனக்கு ஆலோசனை கூறினார்,” என்றார் அவர்.

“வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள அவர் எனக்கு ஊக்கம் அளித்தார். வெற்றிகரமான மனிதனாக மாற வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொல்லுவார். பார்பரா என்னைக் கவனித்துக் கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் என்மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளார். நாங்கள் ஒருவர் மற்றவருக்காக உருவாக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தேன்,” என்கிறார் ஷதாப்.

“நான் போலந்தில் இருந்து ஷதாப்பிற்கு விசிட்டிங் விசா அனுப்பினேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அவரால் போலந்து வர முடியவில்லை. பிறகு ஷதாப்பை சந்திக்க 2021 இறுதியில் நான் இந்தியா வந்தேன்,” என்று பார்பரா கூறினார்.

பலமுறை முயற்சித்தும் கடினமான ஆவணப்பணிகள் காரணமாக தன்னால் போலந்து செல்ல முடியவில்லை என்று ஷதாப் கூறுகிறார். அதனால்தான் இந்த முறை பார்பரா தனது மகளுடன் இந்தியா வந்துள்ளார்.

பார்பரா ஷதாப்பை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளார். “நாம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். இதற்கு சரியான ஒரு முடிவை அளிக்க நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் ஷதாப்பிடம் தெரிவித்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கேள்விக்கு உடனடியாக பதிலளித்த பார்பரா, ”என்னை விட்டால் நான் நாளைக்கே திருமணம் செய்து கொள்வேன். ஆனால் நாங்கள் இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். எனவே ஆவண வேலைகளை பூர்த்தி செய்து சட்டப்பூர்வமாக திருமணம்

செய்து கொள்ள விரும்புகிறேன். அதனால்தான் கால தாமதம் ஆகிறது,” என்றார்.

திருமணத்திற்குப் பிறகு நீங்கள் இந்தியாவில் குடியேறுவீர்களா அல்லது ஷதாப்பை போலந்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த பார்பரா, “திருமணத்திற்குப்பிறகு ஷதாப்பை போலந்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எனக்கு அங்கு ஒரு கட்டுமான நிறுவனம் உள்ளது. அதில் ஷதாப் வேலை செய்யலாம். ஆனால் இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சிறிது காலத்திற்குப்பிறகு நாங்கள் கருதினால் இங்கேயே நாங்கள் குடியேறலாம். இங்கு நான் உணவகத் தொழிலில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது,” என்று கூறுகிறார்.

“நான் எங்கிருந்தாலும் ஷதாப்புடன் இருக்க விரும்புகிறேன். அவருக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்கிறார் பார்பரா.

“நானும் பார்பரா இல்லாமல் வாழ முடியாது. எனவே முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பிறகு நான் பார்பராவுடன் போலந்துக்கு செல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அவர் என் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்.”என்று ஷதாப் கூறினார்.

“நான் திருமணம் செய்து கொண்டவர் இப்போது என்னிடமிருந்து பிரிந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார். மகள் அனியா என்னுடன் போலந்தில் வசிக்கிறார். இப்போது ஷதாப்தான் அவளுடைய அப்பா,” என்று பார்பரா தனது முந்தைய திருமணத்தைப் பற்றி கூறுகிறார்.

“பார்பரா என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். எதையும் மறைக்கவில்லை. அவர் தனது முந்தைய திருமணம் மற்றும் மகள் பற்றி ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். நான் அவரிடம் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. அனியா மிகவும் அன்பான மகள்,” என்கிறார் ஷதாப்.

பார்பராவுக்கு எந்த இந்திய மொழியும் தெரியாது, உங்களுக்கு போலிஷ் மொழி தெரியாது. இந்த நிலையில் ஒருவர் சொல்வதை மற்றவர் எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்று ஷதாபிடம் கேட்டேன்.

“பார்பராவுக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனால் கொஞ்சம் புரியும். எனக்கு ஆங்கிலம் தெரியும். போலந்து மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் நான் பேசுவதை அவர் புரிந்துகொள்கிறார். முன்பு

எனக்கு போலிஷ் மொழியில் எதுவுமே புரியாது. ஆனால் இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். இப்போது அந்த மொழியை சிறிதளவு பேசுகிறேன்,” என்று அவர் பதில் அளித்தார்.

ஷதாபுக்கு பெற்றோர் இல்லை. அவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு மூத்த சகோதரர் உள்ளனர். மூன்று சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த சகோதரர் கொல்கத்தாவில் வசிக்கிறார்.

ஷதாப் சிறுவனாக இருக்கும்போதே அவரது அம்மி (அம்மா) இறந்துவிட்டார். பின்னர் அப்புவும் (அப்பா) சாலை விபத்தில் காலமானார்.

ஷதாபும் அவருடைய உடன் பிறந்தவர்கள் அனைவரும் அவர்களது தாய்வழி மாமாவால் மும்பையில் வளர்க்கப்பட்டனர்.

தற்போது அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாக ஷதாப் கூறுகிறார்.

“மீதமுள்ளது நான் மட்டுமே. நானும் பார்பராவை திருமணம் செய்து கொண்டு என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

“பார்பராவைப் பார்த்து முதலில் என் சகோதரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. விரைவில் பார்பராவை என் சகோதரிகளுக்கு அறிமுகப்படுத்துவேன்,”என்றார் அவர்.

கோவிட் சமயத்தில் தான் வேலையை இழந்ததாகவும், அப்போதிலிருந்து பார்பரா தனக்கு உதவி செய்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஷதாப் பட்டப்படிப்பை முடித்த பிறகு ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்கில் டிப்ளமோ முடித்துள்ளார். இவர் மும்பையில் ஐடி பணியாளராக இருந்து வந்தார்.

“சில நாட்கள் ஹோட்டலில் தங்கிய பிறகு பார்பரா, ஹஸாரிபாக் நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குட்ரா கிராமத்தில் உள்ள என் வீட்டில் தங்க விருப்பம் தெரிவித்தார். அதனால் நான் அவரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன்,” என்று ஷதாப் கூறுகிறார்.

பார்பராவை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் கிராம மக்கள் தினமும் அவரது வீட்டிற்கு வருகிறார்கள்.

“தொடர்ந்து மக்களை சந்திப்பது மற்றும் சந்திக்க வருபவர்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதால் பார்பரா போலாக்கும் அவரது மகளும் சிறிது அசதி அடைகின்றனர். ஆயினும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்,” என்று ஷதாப் கூறுகிறார்.

பார்பரா வேறு நாடு மற்றும் மதத்தைச் சேர்ந்தவர். அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டபோது கிராமவாசிகளின் எதிர்வினை எப்படி இருந்தது?

“பார்பரா வீட்டிற்கு வந்ததில் இருந்து கிராம மக்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். சிலர் திருமணம் பற்றிக்கேட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக நான் கூறினேன்,” என்று 27 வயதான ஷதாப் தெரிவித்தார்.

“ஷதாப் வீட்டின் வறுமையை நாங்கள் பார்த்துள்ளோம். மும்பையில் வசித்து வந்த அவர் ஆங்கிலம் கற்றார். இந்தக் கடின உழைப்பாளி இளைஞரின் வாழ்க்கையில் ஒரு வெளிநாட்டுப் பெண் நுழைந்துள்ளார். இனி ஷதாபின் வாழ்க்கை மாறும் என்று கிராம மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்று கிராமத்தலைவர் அன்வருல் ஹக் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு ஷதாப் வெளிநாடு சென்றுவிடுவாரா? கேள்வியை இடைமறித்த கிராம தலைவர் அன்வருல் ஹக், “ஷாதாபின் குடும்பத்தில் அனைவருமே அவரவர் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்டனர். தன் வாழ்க்கையை வாழ ஷதாபுக்கு உரிமை உண்டு. வெளிநாடு செல்லும் கிராமத்தின் முதல் இளைஞராக அவர் இருப்பார். கிராம மக்கள் எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள்,” என்கிறார்.

”இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கிராமவாசிகளான நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். அவர்களின் பரஸ்பர நம்பிக்கை தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்,” என்றார் அவர்.

ஐநூறு வீடுகள் உள்ள குட்ரா கிராமத்தின் பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் ஒரு சிறிய மசூதிக்கு அருகில் ஷதாபின் பூர்வீக வீடு அமைந்துள்ளது. இங்கு ஹால் மற்றும் சமையலறை கட்டும் பணி நடந்து வருகிறது.

தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக இந்த வீடு கட்டப்படுவதை பார்ப்பதாக 60 வயதான கிராமத்தலைவர் அன்வருல் ஹக் கூறுகிறார்.

” ஷதாப்பின் பாட்டி இந்த மண் வீட்டில் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் கீழ் முதல் முறையாக இரண்டு உறுதியான அறைகளைக் கட்டினார். போலந்திலிருந்து வந்த தனது காதலியின் நிதி உதவியுடன் ஷதாப் இப்போது இந்த வீட்டைக் கட்டுகிறார்,” என்று அவர் தெரிவித்தார்.

கட்டுமானத்தின் கீழ் உள்ள ஷதாபின் இந்த வீட்டில் இரண்டு அறைகள் உள்ளன. ஒரு அறையில் சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்ற அறையில் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. கட்டிலுக்கு மேலே பார்பராவின் சிறிய படம் வைக்கப்பட்டுள்ளது.

”பார்பரா ஹோட்டலில் இருந்து என் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் நிலையைப் பார்த்து வருத்தமடைந்தார். அவரது ஆலோசனையின் பேரில் வீடு கட்டும் பணியை தொடங்கினேன்,” என்று ஷதாப் கூறுகிறார்.

“பார்பரா மற்றும் அவரது மகளின் ஆவணங்களை நான் சரிபார்த்தேன். அவை சீராக உள்ளன. அவர்களின் டூரிஸ்ட் விசா 2028 வரை செல்லுபடியாகும்” என்று உள்ளூர் டிஎஸ்பி ராஜீவ் குமார் பிபிசியிடம் கூறினார்.

“குட்ரா கிராமத்தில் வசிக்கும் ஷதாபிற்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.