ரயில் வேலை நிறுத்தம் தொடர்பில் கடுமையான தீர்மானம்!!
மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் ரயில் பணிப்புறக்கணிப்புகளை அமுல்படுத்துவதற்கு எதிராக அமைச்சரவை கடுமையான தீர்மானம் எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் பொது முகாமையாளரிடம் பேசி தீர்வு காணுங்கள் என ரயில் திணைக்களத்துக்கு தூய சிங்களத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், அமைச்சின் செயலாளரைப் பார்த்து அவரிடம் சொல்லுங்கள். அங்கும் பிரச்சினை தீராவிட்டால் என்னிடம் கூறுங்கள். துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் எப்போதும் தலையிட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைப்பேன்.
இப்போது, திடீரென கொழும்புக்கு ரயிலுடன் பயணிகளை அழைத்துவந்து விட்டு, ரயில் சேவையை நிறுத்தினால், பொதுமக்கள் என்ன செய்வார்.ஃ
ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால், வேலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதால், இது குறித்து கண்டிப்பான முடிவு எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் இன்று அமைச்சரவையில் கூற முயற்சிப்பேன். ரயிலை தனியார் மயமாக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருந்தது. அதை ஒருபோதும் செய்ய முடியாது.
இதை தனியாருக்கு தாரை வார்க்காமல் ஆணையமாக மாற்ற கால அவகாசம் கொடுங்கள் என்று கூறினேன். அதன் பின்னரும் இவ்வாறு மக்கள் துன்புறுத்தப்பட்டால் இலங்கை ரயில் சேவை தொடர்பில் அமைச்சரவையில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியேற்படும்” என்றார்.