மனைவி-உறவினரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
மகாராஷ்டிர மாநிலம் புனே பாலேவாடி பகுதியை சேர்ந்தவர் பாரத் கெய்க்வாட் (வயது 57). அமராவதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மோனி கெய்க்வாட் (44) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாரத் கெய்க்வாட் அமராவதியில் தங்கி பணிக்கு சென்று வந்தார். மனைவி மற்றும் மகன்கள் புனேவில் உள்ள வீட்டில் வசித்தனர். அவர்களுடன் உறவினர் தீபக் (35) என்பரும் தங்கி இருந்தார். பாரத் கெய்க்வாட் வாரம் ஒருமுறை விடுமுறை நாளில் புனேவில் உள்ள வீட்டுக்கு வருவார். வழக்கம் போல நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாரத் கெய்க்வாட் படுக்கையில் இருந்து எழுந்தார். திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தூங்கி கொண்டிருந்த மனைவி மோனியை நோக்கி சுட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த மகன் மற்றும் உறவினர் தீபக் ஆகியோர் எழுந்து கதவை திறந்து கொண்டு வீட்டை விட்டை வெளியேற முயன்றனர். அப்போது பாரத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த தீபக் சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். இதை பார்த்த பாரத்தின் மகன் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் போலீஸ் அதிகாரி பாரத் கெய்க்வாட் அதே துப்பாக்கியை தன் தலையில் வைத்து சுட்டார்.
இதில் அவரது தலையை குண்டு துளைத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் அவரும் இறந்தார். இதுபற்றி அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி மற்றும் உறவினரை சுட்டுக்கொன்று விட்டு பாரத் கெய்க்வாட் தானும் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று தெரியவில்லை. அவர் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.