;
Athirady Tamil News

செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கை!!

0

அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 84 வருடங்களை பூர்த்தி செய்து 85வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இ.தொ.கா மலையகத்துக்காக பாரிய சேவைகளை செய்துள்ளது. பிரஜா உரிமை அற்ற சமூகமாக இருந்த மலையக மக்களும் பிரஜா உரிமை பெற்றுக் கொடுத்து, மலையக மக்களுக்கு சம உரிமையை பெற்றுக்கொடுத்தமை, உரிமைகள், அபிவிருத்தி போன்ற பல விடயங்களை மலையகத்தில் முன்னெடுத்தமை என இதொகாவின் சேவைகள் எண்ணிலடங்காதவை.

மேலும், ஆண், பெண் இருப்பாளருக்கும் சமமான சம்பளம், தோட்டப்புறங்களுக்கான அபிவிருத்தி, பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டமை, ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்தமை என இ.தொ.கா மலையக மக்களுக்கு பரந்துபட்ட சேவையை ஆற்றியுள்ளது.

1987ஆம் ஆண்டு முதல் முதலில் மலையகத்தில் தனிவீடுகள் அமைக்கும் பணியை இ.தொ.கா ஆரம்பித்து வைத்ததுடன், கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளது.

இந்த வேலைத்திட்டங்கள் மலையகத்தில் முழுமையாக வெற்றியடைய இ.தொ.கா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும். தேசிய நீரோட்டத்தில் மலையக மக்களையும் இணைத்து முழுமையான அபிவிருத்தியுடன் முன்னோக்கி கொண்டு செல்ல அமரரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, ஆறுமுகன் தொண்டமான் ஐயா ஆகியோர் பாடுபட்டனர்.

அவர்கள் காட்டிய வழியில் இ.தொ.கா முன்னின்று செயற்படும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.