நீதிபதிகளின் சம்பளத்தில் வரி விதிப்பு – நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு!!
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மேலும் நீடிக்காமல் இருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் பேரில், இடைக்கால உத்தரவை நீடிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வரி அறவீடு தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம், இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகியன சமர்ப்பித்த மூன்று மனுக்களை விசாரிப்பதற்கு ஐவர் அடங்கிய அமர்வு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட ஐவர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற உள்ளது.