நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம்: பிரதமர் மோடிக்கு ராகுல் பதில்!!
டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடும் விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர்கள் கூட்டணிக்கு வைத்திருக்கும் பெயர் குறித்து கடுமையாக தாக்கினார். கிழக்கு இந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா ஆகியவற்றிலும் இந்தியா பெயர் உள்ளது. நாட்டின் (இந்தியா) பெயரை வைத்து மக்களை தவறான வழியில் திசைதிருப்பி விட முடியாது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல் காந்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ”மிஸ்டர் மோடி, நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ, அப்படி எங்களை அழைக்கலாம். நாங்கள் INDIA. மணிப்பூர் நிலைமை சீரடைய உதவுவோம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைப்போம்.
அவர்களுடைய அனைத்து மக்களுக்கும் அன்பு மற்றும் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம். இந்தியாவின் யோசனையை மணிப்பூரில் மறுகட்டமைப்பு செய்வோம்” என்றார். இதற்கிடையே பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் ”நாங்கள் பிரதமர் மோடியால் பெருமையடைகிறோம். 2024-ல் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். இந்திய தேசிய காங்கிரஸ், கிழக்கு இந்திய கம்பெனிகள் வெளிநாட்டினரால் நிறுவப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று இந்தியன் முஜாஹிதீன், இந்தியன் மக்கள் முன்னணி பெயரை பயன்படுத்தி வருகின்றனர். பெயருக்கும், செயல்பாட்டிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது” என்றார்.