பேட்டையில் கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!!
நெல்லை பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்தவா் பிச்சை ராஜ் (வயது 52). அ.தி.மு.க. பிரமுகரான இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் ஆவார். தற்போது ஜே.சி.பி. வைத்து தொழில் செய்து வந்த நிலையில், அப்பகுதியில் டாஸ்மாக் பாரும் நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று இரவு அவர் பாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பேட்டை வீரபாகுநகர் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சென்ற போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த கும்பல் திடீரென பிச்சைராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் அவரது கழுத்து, முகம் மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
சம்பவ இடத்தை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவரது பாரில் வந்து சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்துள்ளனர். அவர்களை பிச்சைராஜ் சத்தம் போட்டு அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார். இதனால் அந்த கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தொழில் போட்டியில் இந்த கொலை நடந்திருக்கலாமா? அல்லது கோவில் திருவிழா தகராறு காரணமாக அவரது உறவினர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறியும் பிச்சைராஜின் உறவினர்கள் இன்று பேட்டை போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.