கள்ளுக்கான தடையை நீக்க கோரி திருப்பூரில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்- அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு!!
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோவுக்கு ரூ.140 விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
உரித்த பச்சை தேங்காயை கிலோ ரூ. 50 க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் தேங்காய்பால் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும். தென்னை சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார், சூலூர் கந்தசாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.