காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு- எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை!!
மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சேதுராமன், ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு முருகேசன், முத்தழகு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முருகேசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் மதுரை வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வெளியில் சென்றுவிட்டு வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட முருகேசன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் வந்தார்.
பின்னர் அங்குள்ள வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயில் அருகிலுள்ள தண்டவாளத்தின் ஓரமாக நின்றிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. ரெயில் அருகில் வந்தபோது திடீரென முருகேசன் ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் நள்ளிரவு நேரமாக இருந்ததால் ஒருசில விநாடிகளில் காப்பாற்றக்கூட யாரும் இல்லாத நிலையில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முருகேசன், சென்னையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கணவரை இழந்த லதா, தற்கொலை செய்துகொண்டு இறந்த மூத்த மகன் முருகேசன் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.