கிரேட்டர் நொய்டாவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 400க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் மூழ்கின!!
வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஹிண்டன் ஆற்றில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், சுதியானா கிராமத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் மூழ்கி உள்ளன. காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கார்கள் அனைத்தும் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த கார்களை வெள்ளம் சூழ்ந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இதற்கிடையே, மகாராஷ்டிரா, அரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.