டிவிட்டர் லோகோ மாற்றம் நீல குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை எக்ஸ்: எலான் மஸ்க் அக்கப்போர்!!
வாஷிங்டன்: தொழிலதிபர் எலான் மஸ்க் விரும்பியபடியே, டிவிட்டர் லோகோவை மாற்றி உள்ளார். நீலக் குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை நிற எக்ஸ் (X) லோகோவை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு அதிருப்தி விமர்சனங்களே அதிகளவில் எழுந்துள்ளன. டிவிட்டர் சமூக ஊடக தளத்தை, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினர். அதன்பிறகு அவர் பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டிவிட்டரின் பாரம்பரியமான லோகோவை மாற்றப் போவதாக நேற்று முன்தினம் டிவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்காக புதிய லோகோவை பரிந்துரைக்குமாறு டிவிட்டர் பயனாளர்களிடம் மஸ்க் கேட்டிருந்தார்.
இந்நிலையில், மஸ்க் விரும்பியபடியே அவருக்கு விருப்பமான கறுப்பு வெள்ளை நிற எக்ஸ் (X) எழுத்து புதிய லோகோவாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக இணையளதள டிவிட்டர் கணக்குகளுக்கு இந்த லோகோ மாற்றப்பட்டது. மொபைல் போன்களில் டிவிட்டர் லோகோவாக நீலக் குருவி நீடித்தது. விரைவில் அனைத்து குருவிகளுக்கும் விடைகொடுப்பதாக கூறி இருக்கும் மஸ்க், டிவிட்டரை மொத்தமாக ரீபிராண்டிங் செய்யும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக கடந்த 1999ல் தொடங்கிய X.com டொமைனை இப்போது twitter.com-க்கு திருப்பி விட்டுள்ளார்.