ராணுவத்தினர் இடையே மோதல்!: சூடானில் 1.9 கோடி பேர் உணவின்றி தவிப்பு; ஐக்கிய நாடுகள் அதிர்ச்சி தகவல்..!!!
சூடானில் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பட்டினி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை மனிதநேய உதவிகள் கூட மறுக்கப்படுகின்றன. இதனிடையே, வடகிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ராணுவ பிரிவினருக்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சண்டை காரணமாக நாட்டில் தண்ணீர், மின்சாரம், எரிவாயு, உணவு, மருந்து ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் சூடானில் 2 கோடியே 47 லட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவர்களில் 1 கோடியே 90 லட்சம் பேர் உணவு இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.