அலையுடன் அடிபட்டுப் போன கட்சிகள் !!
கடந்த போராட்டத்தின் மூலம் அலையாக வந்த சில அரசியல் கட்சிகள் இன்று அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
கட்சியின் புதிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போது மொட்டைப் பாதுகாக்க நாங்கள் மாத்திரமே எஞ்சியிருந்தோம் என்றார்.
மொட்டு மக்களின் கட்சி எனவும், அந்தக் கட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொம்பே தொகுதிக் குழுக் கூட்டம் அண்மையில் (23) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“மொட்டு இலங்கை சுதந்திரக் கட்சியின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவுடனான பிளவுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கட்சி தொடங்கும் போது, புதிய கட்சிகள் அமைத்தால், வீதிகளில் ஊர்வலம் நடத்துவோம் என, சில தலைவர்கள் கூறினர். அதைச் சொல்லி, பல சவால்களுக்கு மத்தியில் வீதிகளில் நடந்து, மக்களை திரட்டி இந்த கட்சியை உருவாக்கினோம்.
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினார். 2015ல் அவர் தோற்று வீட்டுக்குச் சென்றபோது பெரும்பான்மையான மக்கள் சோகத்தில் இருந்தனர். கண்களில் கண்ணீர் வந்தது. எம்முடன் இருந்த மக்களுக்கு நீதி வழங்குவதற்காகவே மஹிந்த காற்றை உருவாக்கினோம். அந்த மக்கள் மத்தியில் செல்ல எங்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. அதனால் ஊர் மக்களை ஒன்று திரட்டி இந்த கட்சியை உருவாக்கினோம். நாங்கள் உருவாக்கிய இந்தக் கட்சி இன்றும் பலமான கட்சியாக உள்ளது. மொட்டு மக்களின் கட்சி. இந்த கட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இது திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் ஜே.வி.பி. இருக்கிறது. ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வர முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். எனவே, அவர்கள் மொட்டை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அடித்தாலும், வீடுகளுக்குத் தீ வைத்தாலும் நாங்கள் பின்னோக்கிப் போக மாட்டோம் என்பதை அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 1977ல் எனது தந்தையின் வீடு எரிக்கப்பட்டது. இவை எமக்குப் பழகிவிட்டன என்றார்.