29 வாரங்களில் 54,779 டெங்கு நோயாளர்கள்!!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில், வாராந்தம் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 23ஆம் திகதி வரையான இவ்வருடத்தின் 29ஆவது வாரம் வரை மாத்திரம் 54,779 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 1,564 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் 9.4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ள போதிலும், டெங்கு அபாயம் இன்னும் குறைவடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களில் 43.4 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதற்கமைய கொழும்பில் 19.2 சதவீதமும் , கம்பஹாவில் 15.2 சதவீதமும் , களுத்துறையில் 6.1 சதவீதமும் , கண்டியில் 14.5 சதவீதமும் , இரத்தினபுரியில் 6 சதவீதமும் , கேகாலையில் 5.8 சதவீதமும் , காலியில் 5.8 சதவீதமும் மற்றும் குருணாகலில் 3.5 சதவீதமும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் எண்ணிக்கையின் அடிப்படையில் 52 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் (எம்.ஓ.எச்.) அதிக அபாயமுள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கண்டி , கொழும்பு தேசிய வைத்தியசாலைகள் , கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கிரிபத்கொடை, கம்பளை, களுத்துறை, கஹவத்தை, கல்முனை மற்றும் புத்தளம் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை ஒட்டுமொத்தமாக கொழும்பில் 11,790 பேரும் , கம்பஹாவில் 11,846 பேரும் , களுத்துறையில் 3,533 பேரும் , கண்டியில் 3,805 பேரும் , புத்தளத்தில் 2,862 பேரும் , இரத்தினபுரியில் 2,218 பேரும் , கேகாலையில் 2,207 பேரும் , மட்டக்களப்பில் 2,097 பேரும் , குருணாகலில் 1,962 பேரும் , திருகோணமலையில் 1,892 பேரும் , காலியில் 1,851 பேரும் , யாழில் 1,639 பேரும் , கல்முனையில் 1,518 பேரும் , மாத்தறையில் 1,027 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.