நம்பிக்கையில்லா தீர்மானம்: நடைமுறை என்ன? !!
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம். வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும். ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்பதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சியோ அல்லது எதிர்கட்சி கூட்டணியோ நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம். ஆளும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கெதிராகவோ அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராகவோ செயல்படுவதாக கருதும்போது இதனை கொண்டு வந்து ஆளும் அரசாங்கத்தின் வழிமுறைகளை எதிர்கட்சிகள் தீர்மானிக்க முடியும். எனவே, தேவைப்படும்போது ஒரு ஆயுதமாக இதனை பயன்படுத்தும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த வழிமுறை அமைகிறது.
மக்களவையின் உறுப்பினர்களில் யார் வேண்டுமென்றாலும் இதனை கொண்டு வரலாம். தீர்மானம் கொண்டு வருவது குறித்த தகவல்களை எழுத்துபூர்வமாக காலை 10 மணிக்குள் சபாநாயகருக்கு அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். சபாநாயகர் இதனை விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா? வேண்டாமா? என தீர்மானிப்பார். அனுமதிக்கும் பட்சத்தில் அதற்கான தேதியும் நேரமும் தெரிவிப்பார். மக்களவையின் 198 விதிகளின் கீழ், சபாநாயகர் அழைப்பு விடுத்த பின்னரே இதனை அறிமுகப்படுத்தி விவாதிக்க முடியும். இந்த தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர் முதலில் பேச, ஆளும் கட்சி தரப்பு இதற்கு ஒரு விளக்கமளித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கும். எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதன் மீது கேள்வி எழுப்பி கருத்துக்களை கூறுவார்கள். நீண்ட, முழுமையான விவாதத்திற்கு பிறகு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும்.
அவ்வாறு நடந்தால் ஆளும் அரசு ராஜினாமா செய்ய வேண்டும். மாறாக தீர்மானத்திற்கு போதிய பெரும்பான்மை கிடைக்காமல் போனால், ஆளும் அரசு வெற்றி பெற்றதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்படும். இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்களவையில் 27 முறை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சி, பல கட்சிகளின் உதவியுடன் புதிதாக அமைத்துள்ள கூட்டணியின் ஒரு பகுதியாக, தெலுங்கானாவின் பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களவையில் 2 தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்தது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் 2018-ம் ஆண்டு நரேந்திர மோடி வரை பல தலைவர்கள் இந்த தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக கூட்டணி அரசு கடந்த 2018-ம் ஆண்டு சந்தித்த நம்பிக்கையில்லா தீர்மானம் 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.