ஈக்வடார் சிறை கலவரம் – கைதிகளுக்கு இடையிலான மோதலில் 31 கைதிகள் பலி!!
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற மோதல்களை தடுக்க சிறைச்சாலைகளில் குழுத் தலைவர்களாக வலம் வரும் நபர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஈக்வடாரின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறைக்கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக விரோத கும்பல் இருதரப்பாக பிரிந்து இருந்து இந்த சிறையில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். அது எல்லை மீறி அதிகார போட்டியாக உருமாறி மோதல் வெடித்து கலவரமானது.
கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை ஏந்தி ஆக்ரோஷமான முறையில் கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரத்தில் 31 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் தப்பியோடி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.