ஈக்வடோர் சிறையில் கலவரம் 31 கைதிகள் பலி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் !!
தென் அமெரிக்கா நாடான ஈக்வடோரில் சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனர்.
இந்த நாட்டின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறைக் கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகவிரோத கும்பல் இருதரப்பாக பிரிந்து இருந்து இந்த சிறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் அது எல்லை மீறி அதிகார போட்டியாக உருமாறி மோதல் வெடித்து கலவரமானது. கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை ஏந்தி ஆக்ரோஷமான முறையில் கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.
இதனால் காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். சிறைத்துறை அதிகாரிகள் இராணுவத்தின் உதவியை நாடினர். அதன்படி கலவரத்தை ஒடுக்க சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விரைந்தனர்.
அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கலவரத்தில் 31 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் தப்பியோடி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேதம் அடைந்த சிறை அறைகள், வளாகங்கள், சிறைச்சாலை உபகரணங்கள் ஆகியவற்றை திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 119 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.