கேரளாவில் கனமழை நீடிப்பு: கடற்கரை- நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல தடை!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரள கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஆற்றங்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு செ்ல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குவாரி தொடர்பான நடவடிக்கைகள், சுரங்கம் மற்றும் கிணறு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.