அடுத்த மாநில உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்: மிசோரம் முதல்வரை கேட்டுக்கொண்ட பிரேன் சிங்!!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மிசோரமில் குகி-ஜோ பழங்குடியினர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா கலந்து கொண்டார். இந்த பேரணியின் போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் குறித்து அவதூறாக பேசப்பட்டுள்ளது. மிசோ பழங்குடியினருக்கு குகி-ஜோ பழங்குடியினர் மற்றும் மியான்மரின் சின் மக்களுடன் நல்ல தொடர்பு உள்ளது.
31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின் மக்கள் அகதிகளாக மிசோரம் மாநிலத்தில் உள்ள முகாமில் உள்ளனர். மிசோரம் மாநில முதல்வர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், அடுத்த மாநில உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். இதுறித்து பிரேன் சிங் கூறியதாவது:- போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது.
மணிப்பூர் மாநிலத்தில் வாழும் குகி சமுதாயத்தினருக்கு எதிராக மணிப்பூர் அரசு செயல்படவில்லை. அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது. மணிப்பூர் ஒருமைப்பாட்டை அழிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் வகையில் ஆயுதமேந்தியவர்களுக்கும் அரசுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
எனக்கு எதிராக மிசோரம் பேரணியில் அவதூறு குரல் எழுப்பியது காட்டுமிராண்டி தனமானது. மற்றொரு மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மிசோரம் மாநில முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய யூனியன் கள நிலவரம் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி, அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்தார்.