14 வயது சிறுமி மாயம்: மூன்று மாதத்திற்குப் பிறகு துப்புதுலங்கியது!!
ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியாவில், ஷையான்-லீ டாட்னெல் (Shyanne-Lee Tatnell) எனும் 14-வயது சிறுமி காணாமல் போனார். கடைசியாக ஏப்ரல் 30-ம் தேதி லான்செஸ்டன் பகுதியில் 8:30 மணியளவில் ஷையான் காணப்பட்டார்.
இந்நிலையில் நபவுலா பகுதியில் ஒரு புல் பாதையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இது ஷையான் உடல் என நம்பப்படுகிறது. தடயவியல் சோதனைக்கு பின்புதான் உறுதி செய்யப்படும். இது சம்பந்தமாக ஸ்காட்ஸ்டேல் பகுதியை சேர்ந்த 36 வயதான ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. “எங்களுக்கு விடை கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகிறோம். ஸ்காட்ஸ்டேல் மற்றும் நபவுலா பகுதியிலுள்ள சில இடங்களை குற்றம் சம்பந்தப்பட்ட பகுதிகளாக நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். இந்த இரு இடங்களுக்கும் ஒரு கிரிமினல் தொடர்பிருக்கிறது என நம்புகிறோம். இது சம்பந்தமாக எங்களின் நீண்ட விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கிய டஸ்மேனிய மக்களுக்கு எங்கள் நன்றி”, என இது குறித்து வட மாவட்ட ஆணையர் கேட் சேம்பர்ஸ் தெரிவித்தார்.
வட டாஸ்மேனியாவின் மிகப்பெரும் தேடுதல் வேட்டை என கருதப்படும் இந்த நடவடிக்கையில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை, ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை மற்றும் மாநில அவசர உதவி சேவை மட்டுமின்றி தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. “ஒரு நாள் என் நிலையில் இருந்து பார்த்தால்தான் உங்களுக்கு உண்மை புரியும்” என தனது மகளை தவறாக சித்தரிக்கும் சில சமூக வலைதள பதிவுகளை குறித்து அந்த சிறுமியின் தாயார் முகநூலில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அம்மாநிலம் முழுவதும் இந்த சிறுமியின் வழக்கை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.