;
Athirady Tamil News

22 வருடங்களில் இல்லாத அளவு வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி!!

0

அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு காலாண்டும் அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது. இதனை 2 சதவிகிதத்திற்கும் கீழே கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் அடிப்படை வட்டி புள்ளிகளை 0.25% புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2001-ம் ஆண்டிற்கு பிறகு, 22 வருடங்களாக எப்போதும் இல்லாத வகையில் இந்த வட்டி விகிதம் அமைந்திருக்கிறது. கால் சதவிகித உயர்வு என்பது வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை 5.25%லிருந்து 5.5% வரை கொண்டு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் (Jerome Powell) கூறியிருப்பதாவது:- வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் மத்திய ஓபன் மார்கெட் கமிட்டி (Federal Open Market Committee) வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொருளாதார நிலைமையையும், விலைவாசியின் ஏற்ற இறக்கங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சியின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள அடிப்படை வலிமை காரணமாக, பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு பவல் கூறியிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. வட்டி விகித உயர்வின் விளைவாக வங்கி துறை பல பொருளாதார அழுத்தங்களை தாங்க வேண்டியுள்ளது. அவை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் வட்டி விகிதத்தை ஏற்றினால் பணப்புழக்கம் குறையலாம்.

அது வேலைவாய்ப்பின்மை உட்பட பல சிக்கலகளை உருவாக்கும். அதன் விளைவாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற பொருட்கள் விற்காமல், தேக்க நிலை உருவாகலாம். வட்டி விகிதங்கள் உயர்வதால் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரிய அளவில் இல்லாத வகையில் மிதமான விளைவுகளோடு அடுத்த நிலைக்கு பொருளாதாரத்தை கொண்டு செல்வதை சாஃப்ட் லேண்டிங் என்று கூறுவார்கள்.

இந்த வழிமுறையைத்தான் அமெரிக்க ரிசர்வ் வங்கி கையாள முயல்கிறது. வரப்போகும் நாட்களில் இந்த வட்டி விகித உயர்வின் தாக்கம் அமெரிக்க பங்கு சந்தையிலும், தொடர்ச்சியாக இந்திய பங்கு சந்தையிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.