மணிப்பூர் விவகாரம்.. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!!
மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை பலியானார்கள். கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும், விவாதம் நடத்த கோரியும் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் உச்சகட்டமாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அனைத்து கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார். மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.