இலவச தானிய ஏற்றுமதியை அறிவித்த புடின் !!
ஆறு ஆபிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா இலவசமாக தானிய விநியோகத்தை மேற்கொள்ளும் என்ற அதிரடியான அறிவிப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று வெளியிட்டுள்ளார்.
கருங்கடல் ஊடாக உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர் ஆபிரிக்க நாடுகளுக்கு தானியத் தட்டுப்பாடு ஏற்படுமென்ற கவலைகள் எழுந்த பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ரஷ்யாவின் சென்ற் பீட்டர்ஸ்பேர்க்கில் இன்று ஆரம்பித்த ரஷ்ய- ஆபிரிக்கா உச்சிமாநாட்டின் ஆரம்ப உரையின் போது இந்த அறிவிப்பை வெளியிட்ட புடின், ஆறு ஆபிரிக்க நாடுகளுக்கு எதிர்வரும் மாதங்களில் இலவச தானிய விநியோகம் மேற்கொள்ளப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
புர்கினா பாசோ, சிம்பாவே, மாலி, சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு 25 முதல் 50,000 தொன் தானித்தை இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய முடியும் என புடின் உறுதியளித்தபோது அதனை ஆபிரிக்க தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து கருங்கடல் ஊடாக துருக்கி மற்றும் ஐ.நாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து இந்த மாத ஆரம்பத்தில் விலகிய ரஷ்யா, கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களுக்கு வரும் சரக்கு கப்பல்கள் இராணுவ இலக்குகளாக கருதப்படும் எனவும் எச்சரித்திருந்தது.
ரஷ்யாவின் இந்த நகர்வால் ஏழை ஆபிரிக்க நாடுகளில் கடுமையான தானியத் தட்டுப்பாடு ஏற்படுமென்ற கவலைகள் எழுந்த பின்னணியில் புடினின் இந்த இலவச தானிய ஏற்றுமதி இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.