;
Athirady Tamil News

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

0

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் சென்ற நிலையில், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், ராஜஸ்தான் பயணத்தை முடித்துகொண்டு இன்று மாலை பிரதமர் மோடி குஜராத்துக்கு சென்றார். அங்கு ராஜ்கோட் நகர் அருகே புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். ரூ.1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமாகும். ராஜ்கோட்டில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஹிராசர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சர்வதேச விமான நிலையம், 2,534 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் இந்திய விமான நிலைய ஆணையம் 1,500 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை கட்டியுள்ளது. இந்த விமான நிலையம், 3,040 மீட்டர் (3.04 கிமீ) நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதையைக் கொண்டுள்ளது. அங்கு 14 விமானங்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படலாம் என்று அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2017 ல், சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி நடத்தினார். இந்நிலையில், இன்று சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர், விமான நிலைய வளாகத்தில் நடந்து சுற்றிப்பார்த்தார்.

அதிகாரிகளிடம் வசதியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டார். மேலும், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.860 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். நாளை, குஜராத்தின் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமி கான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.