பனம் பழத்தில் பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிடும் வட மாநிலத்தவர்!!
பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை. பனை மரத்தில் நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும். பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினுள் சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் சாப்பிடலாம். பனம்பழம் சிறந்த சத்துணவாகும்.
பனம் பழத்தின் அருமை நம்மூர்காரர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் வடமாநிலத்தவர்கள் பனம் பழத்தை பல்வேறு உணவாக மாற்றி சாப்பிடுகின்றனர். வேலூர், சத்துவாச்சாரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிகிச்சைக்காக வந்துள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் சமைத்து சாப்பிடுகின்றனர். வேலூரில் விற்பனை செய்யப்படும் பனம் பழங்களை வாங்கிச் செல்லும் வட மாநிலத்தினர் அதனை தீயில் சுட்டு சாப்பிடுகின்றனர். மேலும் பனம்பழத்தை தோல் உரித்து கொட்டை மேல்புறத்தில் உள்ள நார் பகுதியை கூழாக்குகின்றனர்.
இதில் விதவிதமாக பஜ்ஜி மற்றும் போண்டாவாக சமைத்து சாப்பிடுகின்றனர். வேலூர் உழவர் சந்தையில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் பனம்பழங்களை, வட மாநிலத்தினர் தேடித்தேடி வாங்கி செல்கின்றனர். பார்ப்பதற்கே அரிய பொருளாக காணப்படும் பனம்பழத்தை உள்ளூர்வாசிகள் யாரும் வாங்குவதில்லை. அதனை கடைகளில் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். ஆனால் வட மாநிலத்தினர் இந்த பனம் பழத்தை தேடி தினந்தோறும் உழவர் சந்தைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 50 பழங்களையே வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்திலேயே வடமாநிலத்தினர் தேடி பிடித்து வாங்கி செல்வதால், உடனே தீர்ந்து விடுகிறது. பழத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உழவர் சந்தைக்கு பனம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வட மாநிலத்தினரும் பனம்பழங்களை அதிகம் வருகின்றனர். அதிக பழங்கள் கொண்டு வந்தாலும் அவை அனைத்தும் சிறிது நேரத்திலேயே விற்பனையாகி விடுகிறது. பனம்பழம் விற்பனையும் சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.