;
Athirady Tamil News

வட, கிழக்கு இணைப்புக்கு இனி ஒருபோதும் இடமில்லை!!

0

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியில் யாருமே பொறுப்பெடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரமெடுத்து நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பியுள்ளதாக சுற்றாடல் அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக சுற்றாடல் அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை ஆட்சி செய்வதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், நாட்டை பாரமெடுத்து ஆட்சியை செய்யுமாறு தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசாவை அழைத்துச் சொன்ன போது, அவர் பின்வாங்கிய நிலையில் நாட்டில் ஒரு புரட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எல்லோர் மத்தியிலும் இருந்தது.

அச்சந்தர்ப்பத்தில் தான் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியத்தோடு நாட்டைப் பாரமெடுத்து பொருளாதார வீழ்ச்சியிலிருந்த நாட்டை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றார்.

இச்சந்தர்ப்பத்தில் தழிழ்த்தரப்பு அரசியல் கட்சிகளுட்ன் பேச்சுவார்த்தை இடம்பெற்று அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அதிகாரப்பகிர்வில் முஸ்லீம்களுடைய பங்கென்ன? என்கின்ற விடயத்தை தொடர்பில் மிகவும் தெட்டத்தெளிவாக ஆணித்தரமாக முஸ்லீம் அரசியல் தலைமைகள் எல்லோரும் உடன்பாட்டுக்கு வரவேண்டிய தேவை இருந்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இரவோடு இரவாக முஸ்லிம்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு அரச சாசனமாகத்தான் பதின்மூன்றாவது திருத்தம் அப்போதிருந்தது.

அதன் பின்னர் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லீம் சமுகத்தினுடைய ஒட்டு மொத்த அரசியல் தலைவிதியை மாற்றிய ஒரு வரலாற்றினை நாங்கள் எப்போதம் மறந்து விட முடியாது.

அவ்வாறானதொரு வரலாறு மீண்டும் எழுதப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம். இரவோடு இரவாகத்தான் பதின்மூன்றாவது திருத்தம் இந்தியாவினுடைய அழுத்தத்தினால் நிறைவேற்றப்பட்டது.

அப்போது முஸ்லீம்களால் எதுவும் பேச முடியாமலிருந்தது. அப்போதிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் சென்று முஸ்லீம்களது அரசியல் நிலவரம் என்னவென்று கதைப்பதற்குச் சென்ற வேளையில் உங்களுக்கு கதவு திறந்திருக்கின்றது. வெளியே போகலாம் என்று சொல்லப்பட்டது.

அவ்வாறானதொரு நிலைமைக்கு முஸ்லீம்கள் மீண்டும் தள்ளப்பட்டு விடக்கூடாதென்று நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.