ஆச்சரியப்படுத்தும் முதியவரின் டீக்கடை- ஆனந்த் மகிந்திராவின் உருக்கமான டுவிட்டர் பதிவு!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் முதியவர் ஒருவர் நடத்தும் டீக்கடை டுவிட்டரில் வைரலாகி வருகிறது. 80 வயதான சீக்கியர் அஜித்சிங் என்பவர் அந்த கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அப்பகுதியில் 100 வருட பழமையான மரத்தின் கீழ் செயல்படும் இந்த டீக்கடையில் தேனீருக்கு என்று எந்த விலையும் நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது வாடிக்கையாளர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ கொடுக்கலாம். அல்லது இலவசமாக கூட குடிக்கலாம். வீடியோவில் அஜித்சிங்கை சுற்றிலும் பாத்திரங்களும், கொதிகலனும் இருக்கிறது. அங்குள்ள அடுப்பில் டீ தயாரித்து ஒவ்வொரு கிளாசிலும் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார். அங்குள்ள மக்கள் இந்த தேனீர் கடையை டீக்கடை கோவில் என அழைக்கின்றனர்.
எதற்காக டீயை இலவசமாக கொடுக்கிறீர்கள்? என அஜித்சிங்கிடம் கேட்ட போது அவர் கூறுகையில், தன்னலமற்ற சேவையை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதாகவே இதை பார்க்கிறேன் என கூறுகிறார். இந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பகிர்ந்ததோடு, இனி எப்போதெல்லாம் நான் அமிர்தசரஸ் வருகிறேனோ, அப்போதெல்லாம் இந்த கடைக்கு சென்று டீ குடிப்பேன். அமிர்தசரசில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் அடுத்த முறை இந்த நகரத்திற்கு வந்தால் பொற்கோவிலுக்கு சென்றுவிட்டு நேராக இந்த கடைக்கும் செல்வேன் என பதிவிட்டுள்ளார்.