பவன் கல்யாண் படங்களால் இளம்பெண்கள் பாதிப்பு- ஆந்திர மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு!!
ஜனசேனா கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஏராளமான இளம் பெண்கள் காணாமல் போனதாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் இருவரும் பெண்களை மதித்து பேசியதாக சரித்திரம் இல்லை. ஆந்திராவில் காணாமல் போன பெண்களில் 78 சதவீதம் பேர் மீட்கபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர் தெளிவு படுத்தி உள்ளார்.
ஆந்திராவை தவிர வேறு எங்கும் இது நடக்கவில்லை என கூறிய பவன் கல்யாண் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற முதல் 10 மாநிலங்களை பற்றி பேச மறுப்பது ஏன்? சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது ஏன் மகளிர் போலீஸ் நிலையங்களை அமைக்கவில்லை. பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மகளிர் ஆணையத்தை குறி வைத்து பேசுவதை நிறுத்த வேண்டும். பவன் கல்யாணுக்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். பெண்கள் முன்னிலையில் அவர் என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா?. பவன் கல்யாண் நடித்த மோசமான படங்களால் இளம்பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.