மணிப்பூரை கண்டு ஏன் பயம்? உங்கள் எம்.பி.க்களை அனுப்ப வேண்டியதுதானே!!!- மம்தா பானர்ஜி!
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசு சிபிஐ விசாரணை கேட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூர் செல்ல இருக்கிறார்கள். பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச மறுத்து வருகிறார். இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில் ”நீங்கள் (பா.ஜனதா) இன்னும் ஆறு மாதம்தான் இருக்கப் போகிறீர்கள். மணிப்பூரை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?. உங்களுடைய எம்.பி.க்களை அனுப்புங்கள். யார் பொறுப்பு என்று அவர்கள் சொல்லட்டும். நீங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். மணிப்பூர், நாகாலாந்து எரிந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீர் எரிந்து முடிந்துவிட்டது. இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல இருக்கின்றனர். நான் மணிப்பூர் செல்ல அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்றார்.