;
Athirady Tamil News

இந்தியாவில் செமிகண்டக்டர்கள் தயாரிக்க முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

0

நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் இத்தயாரிப்பிற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன. மின்னணு சிப் தயாரிப்பில் இந்தியாவை உலகின் ஒரு முக்கியமான மையமாக உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

இந்நிலையில், குஜராத் தலைநகர் காந்திநகரில், நூற்றுக்கணக்கான செமிகண்டக்டர் தொழில்துறை நிர்வாகிகள் பங்கேற்ற “செமிகான்இந்தியா 2023” கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: செமிகண்டக்டர் உற்பத்தி செய்ய விரும்புபவர்களுக்கு இந்தியா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. முன்பு ‘ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். இப்போது, ‘ஏன் இந்தியாவில் முதலீடு செய்யக்கூடாது?’ என்று கேட்கின்றனர். யார் வேகமாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும். இந்தியாவில் வாய்ப்புகள் ஏராளம். இந்தியாவில் திகழும் ஜனநாயகமும், மக்கள்தொகையும் வணிகத்தை பல மடங்காக்கும் சக்தி படைத்தது.

மின்னணு சிப் வினியோகத்தில் உலகிற்கு நம்பகமான பங்குதாரராக இந்தியா விளங்கும். இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் கிடையாது. 2028ஆம் ஆண்டிற்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட திறமையான சிப் டிசைன் இன்ஜினியர்களை இந்தியா உருவாக்கும். மின்னணு துறையில் இந்தியாவின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் உற்பத்தி ரூ.2 லட்சம் கோடிக்கும் ($30 பில்லியன்) குறைவாக இருந்தது. இன்று அது ரூ.8 லட்சம் கோடிக்கும் ($100 பில்லியன்) அதிகமாக வளர்ந்துள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.