நினைவிழப்பு, கவனக்குறைவு பிரச்னை கொரோனா பாதிப்பினால் 2 ஆண்டுக்கு பிறகும் மூளை செயல்பாடு பாதிப்பு: ஆய்வில் தகவல்!!
நாள்பட்ட கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் வரை மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுவதாக லண்டன் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இரட்டை ஆராய்ச்சி மற்றும் மரபணு தொற்றுநோயியல் ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்று, அதன் அறிகுறி காலம், அறிவாற்றல் சோதனைகளில் செயல்திறனை பாதிக்கிறதா, காலப்போக்கில் சோதனை செயல்திறன் எவ்வாறு மாறியது என்பதை தெரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் வரை அதன் தொடர்ச்சியான அறிகுறிகளைக் கொண்டவர்கள் இந்த சோதனைகளில் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
நினைவுகூறும் திறன், பணிகளில் கவனம் செலுத்தும் திறன் அல்லது பேச்சுவழக்கில் சரியான சொற்களைக் கண்டுபிடிப்பது போன்ற அறிவார்ந்த செயல்பாடுகள் அல்லது திறன்களில் கொரோனா தொற்றுக்கு பிறகு சிரமங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த அறிகுறிகள் ‘‘மூளை மூடுபனி” என்று அழைக்கப்படுகிறது. அதிக வேலைப்பளு, தூக்கமின்மை, மன அழுத்தம், கணினியில் அதிக நேரம் செலவிடுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் குழப்பம், மறதி, கவனக்குறைவு, மனத் தெளிவின்மை ஆகியவை மூளை மூடுபனியாக வகைப்படுத்தப்படுகிறது. நீண்ட கால கொரோனா எனப்படும் நாள்பட்ட கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்களிடையே இது மிகவும் பொதுவாக காணப்படுகிறது.
மார்ச் 2023 கணக்கின்படி, இங்கிலாந்தில் நீண்ட கால கொரோனா தொற்றினால் பாதித்த 10 லட்சம் பேர் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் 7.5 லட்சம்பேர் நினைவிழப்பு அல்லது குழப்பம் இருப்பதாக தெரிவித்தனர். குறுகிய காலத்தில், மூளை மூடுபனி அறிகுறிகள் வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற அன்றாட பணிகளைச் செய்யும் திறனை பாதிக்கும். நீண்ட காலத்தில், லேசான அறிவாற்றல் குறைபாடு, நினைவிழப்பு போன்ற மிகவும் கடுமையான பாதிப்புகளாக மாறலாம்.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.