;
Athirady Tamil News

ஓப்பன்ஹெய்மரின் அணுகுண்டு சோதனையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அமெரிக்க மக்கள்!!

0

மிக ரகசியமாக இயங்கிய மான்ஹாட்டன் திட்டம், 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்மாதிரி அணுகுண்டை வெடிக்கச் செய்தது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பேசபடும் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்த நிகழ்வைத்தான் மீட்டுருவாக்கம் செய்கிறது.

இந்த வெடிப்பு நிகழ்ந்த நேரத்திற்குப் பிறகு, ஷெர்மன் டாங்கிகள் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குச் சென்றன.

இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் போன்றவை இந்தத் தடிமனான உலோக ராணுவ வாகனங்கள். அதில் பாதுகாப்பு உடையில் இருந்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதைச் சரி பார்க்க மாதிரிகளை எடுக்கச் சென்றனர்.

இது நியூ மெக்சிகோ பாலைவனத்தில் ஜோர்னாடா டெல் மியூர்டோ என்ற இடத்தில் நடந்தது. அங்கு ‘தி கேட்ஜெட்’ என்று அழைக்கப்படும் முன்மாதிரி அணுகுண்டு, மனித வரலாற்றில் மிகப்பெரிய வெடிப்புகளில் ஒன்றை ஏற்படுத்தியது.

இந்த ‘வெற்றிக்கு’ சில நாட்களுக்குப் பிறகு, 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியது. இதனால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

மான்ஹாட்டன் திட்டத்தின் தலைவராக ராபர்ட் ஓப்பன்ஹைமர் இருந்தார். பின்னர் இவர்தான் ‘அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்பட்டார். இவரோடு இந்தப் பேரழிவை உண்டாக்கும் வெடிப்பை உருவாக்க, கதிரியக்க கூறுகளை இணைக்க வேலை செய்த பிற ஆராய்ச்சியாளர்களும் இருந்தனர்.

நியூ மெக்சிகோவில் அவர்கள் தேர்வு செய்திருந்த இடத்தில் ‘கேட்ஜெட்டை’ சோதனை செய்தனர். ஏனெனில் அந்தப் பகுதிதான் பல மைல்களுக்கு மக்கள் வசிக்காத பாலைவனம்.

மக்கள் வசிக்காத பாலைவனம் என்று அவர்கள் நம்பினார்கள்.

உண்மையில் அந்த இடத்திலிருந்து 20கி.மீ. தொலைவில் சில பண்ணைகளும் அதில் வசிப்பவர்களும், அவர்களின் கால்நடைகளும் இருந்துள்ளன. மேலும் தொலைவில், சுமார் 80கி.மீ. சுற்றளவில், துலரோசா பேசின் போன்ற சிறிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர்.

கேட்ஜெட்டை வெடிக்க வைத்துப் பரிசோதிக்க தேதி குறிக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதியன்று காலை 05:30 மணிக்கு என்று நேரம் முடிவானது. ஆனால், உள்ளூர்வாசிகளுக்கு இதுகுறித்த எச்சரிக்கை வழங்கப்படவில்லை.

அந்த வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அதன் வெளிச்சத்தை அல்புகர்கி, எல் பாசோ போன்ற பல மைல் தொலைவிலிருந்த நகரங்களில் வாழ்ந்தவர்களும் கண்டனர்.

“அவர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், குண்டுவெடிப்பின் அதிர்ச்சியால் படுக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு பிரகாசமான ஒளியைக் கண்டார்கள்.

ஏனென்றால் இந்தச் சோதனை உண்மையில் சூரியனைவிட அதிக ஒளி மற்றும் அதிக வெப்பத்தை உருவாக்கியது,” என்று 2021ஆம் ஆண்டு அமெரிக்க பொது சேனலான PBSக்கு அந்தப் பிராந்தியத்தின் சமூகத் தலைவரான டினா கோர்டோவா கூறினார்.

“உலகம் அழியப் போகிறது என்று மக்கள் பயந்தார்கள்,” என்று அவர் கூறினார்.

சோதனைக்குப் பிறகு, அலமோகோர்டோ விமானப் படைத் தளம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.

“கணிசமான அளவு வெடிபொருட்களைக் கொண்ட ஒரு கருவி தொலைதூரத்தில் வெடித்தது. ஆனால் உயிரிழப்பு எதுவுமில்லை.”

“வெடிப்பில் வெளிப்பட்ட வாயுக்கள் ஏற்படுத்தும் வானிலை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க, சில பொதுமக்களை அவர்களின் வீடுகளில் இருந்து ராணுவம் தற்காலிகமாக வெளியேற்றும்,” என்று அந்தக் குறிப்பு தொடர்ந்தது. அப்போது அதை அறிவித்த அல்புகெர்க் ட்ரிப்யூன் செய்தித்தாள் இப்படிக் கூறியிருந்தது.

வெடித்த இடத்தில் உருவாக்கப்பட்ட ஆபத்தான கதிர்வீச்சு பற்றிய எந்த விளக்கமும் எச்சரிக்கையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

முதல் அணுவெடிப்பு சோதனை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் குழுவினர்

“அணுகுண்டு சோதனை முடிந்த உடனே, அதன் விளைவாக உருவான மேகம் உள்ளூர் முழுவதும் நகர்ந்தது. அது பல்வேறு கதிரியக்க ஐசோடோப்புகளை பரப்பியது,” என்கிறார் வட கரோலினா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் வில்லியம் கின்செல்லா.

அந்தச் சுருக்கமான செய்தி அறிக்கையானது மக்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிக் கூறியது. ஆனால் அது ஒருபோதும் செய்யப்படவில்லை.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தின் வடகிழக்கில் 400கி.மீ. நீளமும் 320கி.மீ. அகலமும் கொண்ட பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

மான்ஹாட்டன் திட்டம் தனது ‘டிரினிட்டி சோதனைகாக’ நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தது.

ஏனெனில் இது 1940களில் மக்கள் வசிக்காத இடமாகவும், கணிக்கக்கூடிய வானிலையைக் கொண்ட இடமாகவும் இருந்தது. இது வெடிப்பு மற்றும் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும்.

இருப்பினும், வெடிப்பு எதிர்பார்த்ததைவிட சக்திவாய்ந்ததாக இருந்தது . 15,000 முதல் 21,000 மீட்டர் உயரத்திற்குத் துகள்கள் எழுந்தன. இந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, 46 அமெரிக்க மாநிலங்களிலும், தெற்கு கனடா மற்றும் வடக்கு மெக்சிகோவிலும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அணு உமிழ்வு இருப்பது கண்டறியப்பட்டது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தின் வடகிழக்கில் 400கி.மீ. நீளமும் 320கி.மீ. அகலமும் கொண்ட பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சோதனை தளத்தில் இருந்து 48கி.மீ. தொலைவில் உள்ள சுபதேரா மேசாவில் கதிரியக்கத்தின் அதிகபட்ச அளவில் கண்டறியப்பட்டது.

Tularosa Basin Downwinders Consortium என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் டினா கார்டோவா, டிரினிட்டி சோதனைக்குப் பிறகு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களைச் சேகரித்துள்ளார்.

இது உலகின் பல்வேறு இடங்களில் அணுசக்தி சோதனை தளங்களில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் அறிக்கைகளுடன் ஒத்துப் போகிறது என்கிறார்.

நியூ மெக்சிகோவை பொறுத்தவரை, அந்த நேரத்தில் பல்வேறு குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களிடம் தொலைக்காட்சி அல்லது வானொலி இல்லை. எனவே அவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

குடிநீர் ஆதாரங்கள் இல்லாத ஒரு பகுதியில், 1945ஆம் ஆண்டில் மக்கள் மழைநீரையோ நிலத்தடி நீரையோ சேகரித்து, திறந்த தொட்டிகளில் சேமித்து வைத்தனர். அவை, அணுவெடிப்பால் கதிரியக்க மாசுபாட்டுக்கு உள்ளாகின. மற்ற உயிரினங்களும்கூட கதிர்வீச்சுக்கு ஆளாகின.

“டிரினிட்டி சோதனை உருவாக்கிய கதிரியக்கத்தால் மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக, நிரந்தரமாக மாறியது. அந்தச் சோதனையின் விளைவாக நாங்கள் உண்மையில் அதிக கதிர்வீச்சுக்கு ஆளானோம்,” என்று கோர்டோவா கூறுகிறார்.

டிரினிட்டி அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, பல மாதங்களுக்கு பல ஆண்டுகளுக்கு, உள்ளூர் மக்கள் நோய்வாய்ப்படத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான், அந்தப் பிரச்னைகள் ஜூலை 1945இல் நடந்தவற்றுடன் தொடர்புடையவை என்ப்ோதை அவர்கள் அறிந்தனர்.

“பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோயால் மக்கள் இறக்கத் தொடங்கினர். தங்கள் சமூகத்தில் புற்றுநோய் என்ற வார்த்தையையே கேள்விப்படாதவர்கள் இவர்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் நான்காவது தலைமுறை நான்,” என்கிறார் கோர்டோவா.

பக்கத்து வீட்டுக்காரர் கோர்டோவாவிடம் துலரோசாவில் உள்ள தனது அத்தையைப் பற்றிக் கூறினார். அவர் கர்ப்பமாக இருந்தபோது வெடிப்பு நடந்த இடத்திற்கு வந்தார். அதன்பின் அவர் பிரசவித்தபோது அவரது குழந்தை கண்கள் இல்லாமல் பிறந்தது.

“சுகாதார அமைப்புகள் இல்லாததால், வெடிப்பு நடந்த தளம் பார்வையாளர்களுக்கு மூடப்படவில்லை. 1950களில் கதிரியக்கமயமாக இருந்த அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க எந்தத் தடையும் இல்லை. இன்று சென்றால், அந்தத் தளம் எச்சரிக்கைப் பலகைகளால் சூழப்பட்டுள்ளது,” என்று கார்டோவா கூறினார்.

முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கையெழுத்து வாக்குமூலம்

சோதனை நடந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க சுற்றுவட்டார மக்கள் வந்தனர். மக்கள் எதற்கும் பயப்படாமல், அங்கு பிக்னிக் செய்து கொண்டிருந்தனர். மற்றவர்கள், வெடிப்பிலிருந்து உருவான ‘டிரினிடைட்’ என்ற கற்களைக் கண்டுபிடித்தனர், அது மிகவும் ஆபத்தான பொருளாகும்.

“அங்கு சிதறியிருந்த எஃகுத் தககடுகளை குழந்தைகளின் ஊஞ்சல் போன்றவற்றை உருவாக்க அண்டை வீட்டுக்காரர்கள் பயன்படுத்தினார்கள். திரைச்சீலைகள் செய்ய சில எச்சங்கள் பயன்படுத்தப்பட்டன,” என்று கோர்டோவா விளக்கினார்.

அதைத் தொடர்ந்து, குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். முதலில் அது வயிற்றுப்போக்கு என்று கருதப்பட்டது. ஆனால் அதுவல்ல என்பது பின்னர் தெரிந்தது. கோர்டோவாவின் கூற்றுப்படி, இந்தப் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்தபோது ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் 100 குழந்தைகள் இறந்தன.

இந்தக் காலகட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம். நியூ மெக்சிகோவின் ருயிடோசோவில் உள்ள ஒரு நதியின் அருகே 12 சிறுமிகள் பிக்னிக் சென்றிருந்தனர்.

அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, அவர்களால் நம்ப முடியாத ஒன்றைக் கண்டனர்.

“ஜூலை மாதத்தில் பனிப்பொழிவு! ஆனால் பனி மிகவும் சூடாக இருந்தது,” என்கிறார் அந்தக் குழுவில் ஒருவரான 83 வயதான பார்பரா கென்ட்.

“நாங்கள் அதை எங்கள் கைகளில் பிடித்து முகத்தில் தேய்த்துக்கொண்டோம். நாங்கள் அனைவரும் அந்த ஆற்றில் மகிழ்ச்சியாக இருந்தோம். பனி என்று நாங்கள் நினைத்ததைப் பிடிக்க முயன்றோம்,” என்று அவர் 2015இல் ஒரு பேட்டியில் கூறினார்.

அந்த 12 சிறுமிகளில், இருவர் மட்டுமே 40 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தனர். மற்றவர்கள் புற்றுநோய் மற்றும் பிற நோய்களால் இளம் வயதிலேயே இறந்தனர். கென்ட் தோல் புற்றுநோயை வென்று வாழ்ந்தார்.

முதல் அணுகுண்டு வெடிப்பில் சுமார் 15% புளூட்டோனியம் மட்டுமே பயன்பட்டது. மீதமுள்ள புளூட்டோனியத்தின் பெரும்பகுதி குண்டுவெடிப்பு இடத்திற்கு அருகில் படிந்தது

முதல் அணுகுண்டான கேட்ஜெட் வெடித்தபோது அதிலிருந்த புளூட்டோனியத்தின் பெரும்பகுதி பயன்படவில்லை. அது சுற்றுச்சூழலில் பரவியது. அது பல ஆண்டுகள் உயிர்த்திருக்கக் கூடியது, என்று கின்செல்லா குறிப்பிடுகிறார்.

“வெடிப்பில் சுமார் 15% புளூட்டோனியம் மட்டுமே பயன்பட்டது. மீதமுள்ள புளூட்டோனியத்தின் பெரும்பகுதி குண்டுவெடிப்பு இடத்திற்கு அருகில் படிந்தது. அதேநேரம் அணுப்பிளவால் உண்டான பொருட்கள் அதிக தூரம் பயணித்தன,” என்கிறார்.

“மண்ணில் படிந்தவுடன், இந்த கதிரியக்கத் தனிமம் நிலத்தின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர், விவசாய பொருட்கள் மற்றும் உணவுச் சங்கிலியில் நுழைவதன் மூலம் மேலும் பரவுகின்றன. டிரினிட்டியை தொடர்ந்து பல அணுசக்திப் பரிசோதனைகளின் விளைவாக இதேபோன்ற விளைவுகள் ஏற்பட்டன,” என்று அவர் விளக்குகிறார்.

அமெரிக்கா 1945 முதல் 1962 வரை கிட்டத்தட்ட 200 அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.
அணுவெடிப்பு சோதனைகளால் இதுவரை 20 லட்சம் பேர் இறந்துள்ளனர்

அணுவெடிப்பு சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்கிறார்கள்

அணுசக்தி சோதனை தளங்களைச் சுற்றியுள்ள மக்கள் எதிர்கொண்ட ஆரோக்கியக் கேடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிவது கடினம்.

ஏனெனில் இவை அணுவெடிப்பால்தான் உண்டாயின என்று நிரூபிக்கும் செயல்முறை பல ஆண்டுகள் செய்யப்படுவது.

“வளிமண்டல அணு வெடிப்புச் சோதனைகளின் விளைவாக உலகில் நிகந்த மொத்தப் புற்றுநோய் இறப்புகளின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் 24 லட்சத்திற்கும் இடையில் மதிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த ஆய்வுகள் காலாவதியான கதிர்வீச்சு அபாயத்தின் மதிப்பீடுகளைப் பயன்படுத்தின. அவை ஆபத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றன,” என்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டில்மன் ரஃப் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்னீன் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டிமிட்டிரி ஹாக்கின்ஸ் ஒரு கட்டுரையில் கூறுகிறார்கள்.

நியூ மெக்ஸிகோவில் நடந்த முதல் அணுகுண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு இப்போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

நியூ மெக்ஸிகோவில் நடந்த முதல் அணுகுண்டு வெடிப்பின் கதிரியக்கத் தாக்கம் உணரப்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிய எந்த அதிகாரப்பூர்வமான ஆய்வும் நடத்தப்படவில்லை.

அந்த நேரத்தில் குறைந்த மக்கள் தொகையே இருந்தபோதிலும், கதிரியக்கக் கழிவுகள் படிந்த இடங்களில் பல தசாப்தங்களாக மனித இருப்பு அதிவேகமாக வளர்ந்திருக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அணுசக்தித் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டபோது அமெரிக்க அரசாங்கம் அதை எதிர்கொள்ளத் தொடங்கியது.

ஆனால் அண்டை மாநிலமான நெவாடாவை சேர்ந்த யுரேனியம் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமே 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான இழப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக அங்கீகரிக்கப்பட்டனர்.

முதல் அணுகுண்டு வெடிப்பு நிகழ்ந்த நியூ மெக்ஸிகோவில் இருந்தவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படவே இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.