;
Athirady Tamil News

இந்தியாவில் அஹ்மதியா மக்களை ‘முஸ்லிம் அல்லாதவர்கள்’ என்று அறிவித்த சர்ச்சை – முழு விவரம்!!

0

இந்தியாவின் அஹ்மதியா சமூகத்தை ‘காஃபிர்’ மற்றும் ‘முஸ்லிம் அல்லாத’ சமூகமாக அறிவிக்கும் ஆந்திரப் பிரதேச வக்ஃப் வாரியத்தின் முன்மொழிவை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது சமூகங்களுக்கு இடையே வெறுப்பை வளர்க்கும் செயலாக அமைந்துவிடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வக்ஃப் வாரியத்திற்கு யாருடைய மத அடையாளத்தையும் தீர்மானிக்கும் உரிமை இல்லை என்றும், வக்ஃப் சொத்துக்களைக் கவனிப்பதும் அவற்றைப் பாதுகாப்பதும் மட்டுமே அதன் பணி என்றும் அமைச்சகம் கூறுகிறது.

இந்நிலையில், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களின் வக்ஃப் வாரியங்கள், அகமதியா சமூகத்தினரை எதிர்த்து, இஸ்லாத்தில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக, இந்திய அஹ்மதியா சமூகத்தினர், மத்திய அரசுக்கு, கடந்த வாரம் கடிதம் எழுதினர்.

இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு, மாநில வக்ஃப் வாரியத்தின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான மற்றும் சட்டவிரோதமான தீர்மானத்தை மறுஆய்வு செய்யுமாறு ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அஹ்மதியா சமூகம் உட்பட யாருடைய மத அடையாளத்தை தீர்மானிக்கும் பொறுப்பும் அதிகாரமும் வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

அஹ்மதியா சமூகத்தின் கூற்றுப்படி, மிர்சா குலாம் அகமது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சி இயக்கத்தை வழிநடத்தினார். மேலும் அவரைப் பின்பற்றுபவர்கள் தங்களை ‘அஹ்மதியா முஸ்லிம்கள்’ என்று குறிப்பிடுகின்றனர்.
‘முஸ்லிம் அல்லாதவர்’ மற்றும் ‘காஃபிர்கள்’

ஆந்திரப் பிரதேசத்தின் வக்ஃப் வாரியம் பிப்ரவரி 2012 இல் பிறப்பித்த பழைய ‘ஃபத்வா’வில் அஹ்மதியாக்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் அவர்களின் திருமணங்களை காஜிக்கள் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த ஃபத்வாவை எதிர்த்து அஹ்மதியா சமூகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அந்த முன்மொழிவை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீதிமன்றங்களின் உத்தரவை மீறி, ஆந்திர வக்ஃப் வாரியம், இந்த ஆண்டு பிப்ரவரியில், அஹ்மதியா சமூகத்தை முஸ்லிம் அல்லாதவர்களாக அறிவித்து, மீண்டும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியதாக, மத்திய அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவின் அடிப்படையில், வக்ஃப் வாரியம் சமீபத்தில் அஹ்மதியா சமூகத்தின் சொத்தை வக்ஃப் சொத்தில் இருந்து பிரித்து, அந்த சமூகத்தை ‘முஸ்லிம் அல்லாதவர்கள்’ மற்றும் ‘காஃபிர்கள்’ என்று கூறி, அவர்களின் சொத்தை அவர்களே நேரடியாக நிர்வகிக்கும் வகையில் அந்த சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு பரஸ்பர மரியாதையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருவதாகவும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாத் பிபிசிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளது.

இது மட்டுமின்றி, “இந்திய அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு நபருக்கும் தான் பின்பற்ற விரும்பும் எந்த மதத்திலும் சேர உரிமை உண்டு. இருப்பினும், அஹ்மதியா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை சில முஸ்லிம் அமைப்புகள் மற்றும் வக்ஃப் வாரியம் மீறுகின்றன. இது நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைத்து, அஹ்மதியா முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடும் ஒரு முயற்சி எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு நபரும் தான் விரும்பும் மதத்தை ஏற்றுக்கொள்வது அவரின் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையை எந்த அமைப்போ, நிறுவனமோ பறிக்க முடியாது,” என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவின் சுன்னி முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத்-உலமா-இ-ஹிந்த், அஹ்மதியா சமூகத்தை முஸ்லிமல்லாதவர்களாக அறிவிக்கும் ஆந்திரப் பிரதேச வக்ஃப் வாரியத்தின் முன்மொழிவை ஆதரித்துள்ளது.

இஸ்லாத்தின் நபி ஹஸ்ரத் முகமதுதான் கடைசி நபி (இஷ்தூத்) என்ற இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையை காதியானிகள் (அஹ்மதியாக்கள்) நம்பவில்லை என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும், 1974 ஆம் ஆண்டு இஸ்லாமிய அமைப்பான ‘உலக முஸ்லிம் லீக்’ கூட்டம் நடைபெற்றது என்றும், அதில் 110 நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்றும், இதில் அஹ்மதியா சமூகம் இஸ்லாத்தின் வரம்பிலிருந்து நீக்கப்பட்டது என்றும் ஜமியத்-உலமா-இ-ஹிந்த் கூறியுள்ளது.

அஹ்மதியா சமூகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஹ்மதியர்கள் நபிகள் நாயகம்-இ-இஸ்லாமை நம்பவில்லை என்றும் அவர்களின் கலிமா (நெறிமுறை வாக்கியம்) வேறுபட்டது என்றும் அந்த சமூகத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது.

“இவை கட்டுக்கதைகள் மற்றும் பொய்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் கூறமுடியாது. அஹ்மதியா முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தின் நபி ஹஸ்ரத் முஹம்மதுவை இஸ்லாத்தின் கடைசி தீர்க்கதரிசி என்று ஆணித்தரமாக நம்புகிறது. அவரைக் கௌரவிப்பதற்காக தியாகங்களைச் செய்யத் தயங்குவதில்லை. ஒவ்வொரு அஹ்மதியாவும் இஸ்லாத்தின் கடமைகளை இதயப்பூர்வமாக கடைப்பிடிக்கிறார் என்பதுடன் முஸ்லிம் மத நம்பிக்கைகளில் உண்மையாக வாழ்ந்து வருகிறார்.”

அஹ்மதியா மக்களை முஸ்லிமல்லாதவர்கள் என்று அறிவிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அஹ்மதியா சமூகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இது ஒரு சட்டவிரோத மற்றும் மத விரோதச் செயல் என்பது மட்டுமல்ல, அஹ்மதியா சமூகத்தின் மக்களை புறக்கணிக்கும் முயற்சி. நாட்டு மக்களின் ஒற்றுமையை உடைப்பதற்கும், அமைதியான சூழலைக் கெடுப்பதற்கும் மட்டுமே இது போன்ற செயல்கள் வழிவகுக்கும்.”

இந்தியாவில் உள்ள அஹ்மதியா சமூகம் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களின் ஃபிர்க் (வகுப்பு) ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த சமூகத்தின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சமாக இருந்தது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அஹ்மதியா முஸ்லிம்கள் பஞ்சாபின் காடியன் நகரத்தில் வாழ்கின்றனர். அஹ்மதியா சமூகத்தின் நிறுவனர் மிர்சா குலாம் அகமது இந்த ஊரில் தான் பிறந்தார்.

அஹ்மதியா சமூகத்தின் கூற்றுப்படி, மிர்சா குலாம் அகமது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்கான இயக்கத்தை வழிநடத்தினார் என்பதுடன் மேலும் அவரைப் பின்பற்றுபவர்கள் தங்களை அஹ்மதியா முஸ்லிம்கள் என்று அழைக்கிறார்கள்.

காதியானில் இந்த ஜமாத்தின் ஒரு பெரிய மையம் உள்ளது. இது தவிர டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா, வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலும் அஹ்மதியர்கள் குடியேறியுள்ளனர். டெல்லியில் அவர்களுக்கு பல மசூதிகள் மற்றும் மையங்கள் உள்ளன.

கடந்த காலங்களிலும் இந்தியாவின் சுன்னி மத அமைப்புகள் அஹ்மதியா சமூகத்தினரின் மத நம்பிக்கைகளை எதிர்த்தன என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர்கள் இங்கு இதுபோன்ற பெரும் பிரச்சனைகள், மத பாகுபாடுகள் மற்றும் கொடுமைகளை சந்திக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் இவற்றை அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை இருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள அஹ்மதியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக தங்கள் அடையாளத்தை ரகசியமாக வைத்து, எந்த மதச் சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

பிபிசியிடம் பேசிய பாகிஸ்தானில் உள்ள ஜமாத்-இ-அஹ்மதியாவின் செய்தித் தொடர்பாளர், அரசு மட்டத்தில் சட்டம் இயற்றி அஹ்மதியா ஜமாத் முஸ்லிம் அல்லாததாக அறிவிக்கப்பட்ட ஒரே நாடு பாகிஸ்தான் என்று கூறினார்.

சில நாடுகளில் பல இஸ்லாமிய சபைகள் மற்றும் மன்றங்களில் சமூக மட்டத்தில் ஃபத்வாக்கள் வழங்கப்பட்டாலும், அஹ்மதியர்கள் அங்கு எதிர்ப்புச் சூழலை எதிர்கொண்டாலும், மற்ற நாடுகளில் அரசு ரீதியாக அரசு மட்டத்தில் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அஹ்மதியா சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களில் இருந்து மினாராவை அகற்றும் பிரச்சாரம் நடந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அஹ்மதியா சமூகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், இது போன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அண்மையில், அஹ்மதியா வழிபாட்டுத் தலங்களில் உள்ள மினாரை இடிக்க ஒரு மதக் குழு 10 முஹர்ரம் (இஸ்லாமிய நாட்காட்டியின் ஒரு மாதம்) நிர்வாகத்திற்கு காலக்கெடுவை வழங்கியது என்றும் தெரிவித்தார்.

ஜீலம் நகரில், இந்த மாதத்தில் அஹ்மதியா சமூகத்தினரின் கல்லறைகளில் மை அடித்து, அவற்றை உடைத்த சம்பவமும் நடந்தது.

முன்னதாக, பக்ரீத் பண்டிகையின் போது, ​​பல்வேறு நகரங்களில் உள்ள பல அகமதியா குடிமக்களின் வீடுகளில் இருந்து பலியிடப்பட்ட விலங்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே நேரத்தில் ‘இஸ்லாமிய பலியிடும் சடங்கை’ ஏற்றுக்கொண்டதற்காக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல், மே 4, 2023 அன்று, சிந்துவில் உள்ள மிர்பூர் காஸில், ஒரு கிளர்ச்சியடைந்த குழு, மினாரை உடைத்து அஹ்மதியா சமூகத்தின் வழிபாட்டுத் தலத்திற்கு தீ வைத்தது.

மே மாதத்திலேயே, குர்ஆனைக் கற்பிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, கிளர்ச்சியடைந்த மக்கள் ஒரு அஹ்மதியா வழிபாட்டுத் தலத்தைத் தாக்கினர்.

கடந்த ஆண்டில், சர்கோதா, குஜராத், குஜ்ரன்வாலா, மிர்பூர் காஸ், உமர்கோட் கராச்சி, தோபா தேக் சிங் மற்றும் பிற நகரங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.