பாகிஸ்தானில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து தீ பிடித்தது- 8 பேர் பலி!!
பாகிஸ்தான் கில்கிட் பலுஸ்திஸ்தான் பகுதியில் சுற்றுலா மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. இந்த வேனில் 16 பேர் பயணம் செய்தனர். டைமர் மாவட்டம் பாசார்பாஸ் என்ற பகுதியில் சென்ற போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் சென்ற பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள். பள்ளத்தில் விழுந்த வேகத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை உள்பட 8 பேர் இறந்தனர். 4 பெண்கள், 4 குழந்தைகள், மற்றும் ஒரு ஆண் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பாகிஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் விழுந்து 6 பேர் பலியானார்கள். பலுகிஸ்தான் பகுதியில் பல ரோடுகள் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.