கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொடூரமான தாக்குதல்: உயிருக்கு போராடும் 11 வயது சிறுமி!!
மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தது மைஹார் நகரம். இங்கு பிரபலமான அன்னை சாரதா தேவி ஆலயம் உள்ளது. நேற்று மாலை 11-வயது சிறுமி, அன்னை சாரதா கோயிலில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை ரவி சவுத்ரி (31) மற்றும் அதுல் பதோலியா (30) எனும் அக்கோயிலின் ஊழியர்கள் இருவர் வழிமறித்துள்ளனர். பிறகு அருகில் உள்ள காட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அத்துடன் வெறி அடங்காமல் கொடூரமாக தாக்கி உள்ளனர். தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி நீண்டநேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். அப்போது, வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவளை கண்டுபிடித்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அச்சிறுமியை மீட்டு ரேவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. “கடிபட்ட காயங்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதலால் அவரது உடலே நீல நிறமாக மாறியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சிறுமியை கடுமையான முறையில் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்,” என அச்சிறுமிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் இன்று தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடத்தல், கூட்டு பலாத்காரம், காயப்படுத்துதல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது. தேவைப்பட்டால், அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ஏர் ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது” என்று காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கே.பி. வெங்கடேஷ்வர் கூறினார். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு குழு, இன்று மைஹார் நகரில் உள்ள அந்த இரு குற்றவாளிகளின் வீடுகளை இடித்தது. இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதல்வர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மைஹாரில் நடந்த பலாத்காரம் பற்றிய தகவல் எனக்கு கிடைத்தது.
என் இதயம் வலிக்கிறது. நான் வேதனைப்படுகிறேன். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன். சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். கைது செய்யப்பட்ட கோவில் ஊழியர்கள் இருவரையும் மைஹார் கோவில் நிர்வாகக் குழு உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது.