மணிப்பூரில் இருந்து திரும்பும்போது.. எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களுக்கு பா.ஜ.க. சவால்!!
மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அத்துடன், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சபாநாயகர் இன்னும் விவாதத்திற்கான தேதி அறிவிக்கவில்லை. இதற்கிடையே கள நிலவரம் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A.) கட்சிகளின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்னர்.
இன்று மதியம் இம்பால் சென்றடைந்த அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்குச் சென்றனர். அங்கு, அவர்கள் குகி பழங்குடி தலைவர்கள், சிவில் சமூகம் மற்றும் மகளிர் குழுக்களை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கவுரவ் கோகாய், திரிணாமுல் சார்பில் சுஷ்மிதா தேவ், திமுகவின் கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பயணம் குறித்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘நாங்கள் அரசியல் பிரச்சனையை எழுப்புவதற்காக மணிப்பூர் செல்லவில்லை. மணிப்பூர் மக்களின் அவலநிலை, அவர்களின் வலியை புரிந்து கொள்வதற்கான செல்கிறோம். அவர்களின் வலிக்கு தீர்வு காணவேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்.
மணிப்பூரில் உண்மையிலான நிலை குறித்து ஆராய்வதற்காக செல்கிறோம்’ என்று தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இந்த பயணத்தை பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறும்போது, ‘இந்த ஐ.என்.டி.ஐ.ஏ. குழுவினர் மணிப்பூரில் இருந்து திரும்பும்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் மேற்கு வங்காள மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கிறாரா? என்று கேட்க விரும்புகிறேன். ஐ.என்.டி.ஐ.ஏ.வின் இந்த 20 எம்.பி.க்கள் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் பற்றிய அறிக்கைகளையும் கொடுப்பார்களா?’ என கேள்வி எழுப்பினார்.