ராகுல் 2-வது நடைபயணம் ஆகஸ்டு 15-ந்தேதி தொடக்கம்?!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நடைபயணத்தை தொடங்கிய அவர் 136 நாட்கள் நடந்தே சென்று காஷ்மீரில் நிறைவு செய்தார். ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ந் தேதி இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது. ராகுல் காந்தி பாத யாத்திரையானது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக காஷ்மீரை சென்றடைந்தது.
ராகுல் காந்தியின் இந்த 5 மாத பாதயாத்திரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ராகுல் காந்தி 2-வது கட்ட நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த முறை ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தை மையமாக வைத்து நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். முதல் கட்ட நடைபயணத்தில் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் காசியாபாத், பாக்பத் மற்றும் ஷாம்லி ஆகிய 3 மாவட்டங்களை மட்டுமே கடந்து சென்றார். இந்த முறை உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை கவரும் வகையில் அவரது நடைபயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தின் போர்பந்தரில் இருந்து ராகுல்காந்தி 2-ம் கட்ட நடைபயணத்தை மேற்கொள்வார் என தெரிகிறது. 2-ம் கட்ட நடைபயணம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15-ந்தேதி அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளாக அக்டோபர் 2-ந்தேதி தொடங்குவார் என தெரிகிறது. அவர் செல்லும் பாதைகள் தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தில் ராகுல் இரண்டு வாரங்களுக்கு மேல் நடைபயணம் செல்வார் என்றும், இந்த பாதை சுமார் 24 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் நடைபயணம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ராகுல்காந்தி 2-வது கட்ட நடைபயணத்தில் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான உ.பி.யில் அதிக நாட்கள் பல்வேறு மாவட்டங்களை கவரும் வகையில் அமைய வேண்டும் என்று கட்சியின் மாநிலத் தலைமையும், தொண்டர்களும் விரும்புகின்றனர்” என்கிறார்.