;
Athirady Tamil News

ஜி20 மாநாடு: மோதி வலிய சென்று ஜின்பிங்கிடம் பேசியது என்ன? 8 மாதங்கள் கழித்து சீனா அறிக்கை ஏன்?

0

உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் குழுவான ஜி20-இன் உச்சிமாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது.

நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்த பாணி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இரவு விருந்து நேரம், பிரதமர் மோதி உணவு மேசையில் அமர்ந்திருந்தார். இதற்கிடையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் வருவதைப் பார்த்து மோதி நாற்காலியில் இருந்து எழுந்து சீன அதிபரின் பக்கத்தில் சென்றார்.

இரு தலைவர்களும் பரஸ்பர அன்புடன் கைகுலுக்கி சிறிது நேரம் கலந்துரையாடினர். 2020ஆம் ஆண்டில் கல்வானில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையிலான முதல் மற்றும் இதுவரையிலானான ஒரே சந்திப்பு அதுதான்.

பாலி உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கும் பிரதமர் மோதி.

இந்த சந்திப்பு பற்றி இப்போது குறிப்பிடுவதற்கான காரணம் சீனாவின் சமீபத்திய அறிக்கை.

கடந்த ஆண்டு பாலியில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதாகவும், இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்க ‘ஒருமித்த கருத்து’ எட்டப்பட்டது என்றும் சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
எங்கே, எதற்காக அறிக்கை வெளியிடப்பட்டது?

தென்னாப்பிரிக்காவின் ஜோஹானஸ்பெர்க்கில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் (என்எஸ்ஏ) கூட்டம் ஜோஹானெஸ்பர்க்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீனா தரப்பில் இருந்து வெளியுறவு அமைச்சர் வாங் யீ யும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்கள்.

“கடந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோதியும், சீன-இந்திய உறவுகளை வலுபடுத்த பாலியில் ஒரு முக்கிய உடன்பாட்டை எட்டினர். இருதரப்பு உறவுகளை அதன் உண்மையான அர்த்தத்தில் இரு நாடுகளும் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பும் தலையீடுகளைத் தவிர்த்து, ஒருமித்த கருத்து மற்றும் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும். மேலும் நிலையான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் விதமாக இருதரப்பு உறவுகள் மேம்படுத்தப்படும்,” என்று இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் சந்திப்பு குறித்து இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தோவல்-வாங் யீ சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

“கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலைமை, மூலோபாய நம்பிக்கை மற்றும் உறவின் பொதுவான மற்றும் அரசியல் அடிப்படையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக இந்த சந்திப்பின் போது தோவல் குறிப்பிட்டார்.

இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதில் உள்ள தடைகளை நீக்கும்விதமாக, நிலைமையை முழுமையாகச் சீராக்கவும், எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும் நீடித்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தியா-சீனா உறவுகள் இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, பிராந்தியத்திற்கும், உலகிற்கும் முக்கியமானவை என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்,” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அறிக்கைகளிலும் இரண்டு விஷயங்கள் பொதுவாக உள்ளன. முதலாவது எல்லையில் பதற்றத்தைக் குறைப்பது. இரண்டாவது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது.

ஆனால், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மோதியும் ஜின்பிங்கும், பாலியில் ‘ஒருமித்த கருத்தை’ எட்டினார்கள் என்ற விஷயம் பற்றி மிக அதிகமாகப் பேசப்படுகிறது.

இம்மாதம் 14ஆம் தேதி வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளின் கூட்டத்தில் சீனாவின் நடப்பு வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்துப் பேசினார்.

அப்போதும் `உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு` பிரச்னை எழுப்பப்பட்டது. விரைவில் பிரச்னையை தீர்க்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

அடுத்த மாதம் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு பெரிய உச்சி மாநாடுகளுக்கு முன்பாக சீனா திடீரென இரு நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து தொடர்பாகப் பேசியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களின் நிபுணருமான டாக்டர் ஸ்வர்ண சிங், இதுபோன்ற சந்திப்புகளில் எப்போதுமே இரு தரப்பிலிருந்தும் மாறுபட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன என்றார்.

“நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் எத்தனை அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்குக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி வெவ்வேறு விளக்கங்கள் வெளியாகின்றன. கூட்டத்தின் எந்த விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும், எதற்கு வேண்டாம் என்ற உள்நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வேறுபாடுகள் மிகவும் ஆழமானவை என்பதால் இருதரப்பும், சந்திப்பு தொடர்பான வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை,” என்று டாக்டர் ஸ்வர்ண சிங் கூறுகிறார்.

மறுபுறம், ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் ‘சர்வதேச உறவுகள் மற்றும் ஆட்சிமுறை ஆய்வுகள்’ இணைப் பேராசிரியர் ஜபின் டி. ஜேக்கப், சீனாவின் இந்தக் கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று குறிப்பிடுகிறார்.

“எல்லையில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கூற்றை நிலைநாட்ட கடந்த ஒரு வருடமாக சீனா முயல்கிறது. இரவு விருந்தின்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி நடத்திய உரையாடலில் உறவுகளை மேம்படுத்துவது பற்றிப் பேசப்பட்டிருக்கலாம். இது நடக்கக்கூடியது.

ஆனால் இரு நாடுகளும் எல்லையில் ஸ்திரத்தன்மையை பேண முயன்றால் மட்டுமே ஒருமித்த கருத்து ஏற்படும். ஒரு தரப்பிலிருந்து முயற்சி இல்லை என்றால் ஒருமித்த கருத்து என்பதற்கு அர்த்தம் என்ன,” என்று ஜேக்கப் வினவினார்.

சீனாவின் கூற்றை இந்தியா இதுவரை மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை. இவ்வாறான நிலையில் சீனாவின் கூற்று இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

சீனா விஷயங்களை பெரிதுபடுத்திக் கூறியுள்ளது. இந்தியாவுக்கு இதனால் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்படாது என்று பேராசிரியர் ஜேக்கப் கூறுகிறார்.

“இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது போல், சீன எல்லையில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறாத வரை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமை சாதாரணமாக இருக்காது. இது தான் உண்மை. சீனா அதை ஏற்க வேண்டும்,” என்று ஜேக்கப் தெரிவித்தார்.

இந்தக் கூற்றை இந்தியா மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ அவசியமில்லை என்று டாக்டர் ஸ்வர்ண சிங் கருதுகிறார்.

“சீனாவின் கூற்றை இந்தியா முக்கியமானதாகக் கருதியிருந்தால், ‘ஒருமித்த கருத்து எட்டப்பட்ட’ விஷயத்தை இந்தியா பாலி உச்சிமாநாட்டிற்குப் பிறகு முறையாக அறிவித்திருக்கும். ஆனால் இந்தியா அதை அப்போதும் பகிரங்கப்படுத்தவில்லை. தோவல் மற்றும் வாங் யீயின் சந்திப்பிற்குப் பிறகும் அதைக் குறிப்பிடவில்லை,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வேறுபாடுகளைத் தவிர அத்தகைய கூற்றுகளில் மொழிகளின் பங்களிப்பும் இருப்பதாக டாக்டர் ஸ்வர்ண சிங் கருதுகிறார்.

“பிரதமர் மோதி பெரும்பாலும் இந்தி மொழியில் பேசுகிறார். சீன அதிபர் அவர்களின் மொழியில் பேசுகிறார். எனவே அதன் விளக்கம் வெளியாகும்போது இதுபோன்ற குழப்பம் பொதுவாகக் காணப்படும் ஒன்றுதான்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவசியம் என்று கருதினால் இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பாக மறுப்பு வெளியிடும் என்கிறார் அவர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலால் எழுந்த பதற்றம் இன்னும் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் தனக்கு நல்லுறவு இருப்பதாக சீனா ஏன் காட்டிக்கொள்ள விரும்புகிறது என்ற கேள்வி கட்டாயம் எழுகிறது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் ஜேக்கப், “சீனா தற்போது அதிக அழுத்தத்தில் உள்ளது. ஒரு பக்கம் அமெரிக்காவின் அழுத்தம், மறுபுறம் பொருளாதார அழுத்தம். வெளியுறவு அமைச்சரை மாற்றியுள்ளது போன்ற உள்விவகாரங்களும் உள்ளன. அதனால்தான் சீனா மற்ற நாடுகளுடன் (இந்தியா உட்பட) கூடுதல் பதற்றத்தை விரும்பவில்லை,” என்றார்.

“மணிப்பூர், பொருளாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பாக இந்தியாவும் அழுத்தத்தில் உள்ளது. எனவே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு தொடர்பான பிரச்னையை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது.”

இந்தப் பிரச்னைக்கு சீனாவின் இரட்டை வேடமே காரணம் என்று டாக்டர் ஸ்வர்ண சிங் கருதுகிறார்.

“சீனா சொல்வது ஒன்று. செய்வது ஒன்று. இதற்கு ‘ஆர்ட் ஆஃப் டிப்ளமசி’ என்று பெயர். சீனாவுக்கு இதில் நிபுணத்துவம் உள்ளது. சீனா அறிக்கை போன்றவற்றை வெளியிடும்போது கொள்கை சார்ந்த நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது அதன் நடத்தை பெரும்பாலும் வேறாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசினார்.

சீனாவுடனான உறவு குறித்து அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “சீனா ஒரு பெரிய பொருளாதாரம். நான் என்ன செய்யப் போகிறேன்? சிறிய பொருளாதாரமாக இருக்கும் நான் ஒரு பெரிய பொருளாதாரத்திற்கு எதிராக சண்டை போடமுடியுமா? இது எதிர்வினை பற்றிய கேள்வி அல்ல, இது பொது அறிவு சார்ந்த விஷயம்,” என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் ஜேக்கப் ஜெய்சங்கரின் கூற்றை ஏற்கவில்லை. அமெரிக்கா-சீனா உதாரணத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவைவிட சிறியது. ஆனாலும் சீனா அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது. கேள்வி பொருளாதாரம் பற்றியது அல்ல, கொள்கை பற்றியது.

சீனாவுடன் போட்டியிடும் வகையிலான தெளிவுமிக்க கொள்கைகள் நம்மிடம் இல்லை. உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு குறித்து நாம் அஞ்சுகிறோம்.

நாம் ஓரிடத்தில் ஏதாவது செய்தால், உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம் என்று அஞ்சுகிறோம். மாறாக, சீனாவிற்கு அத்தகைய பயம் இல்லை,” என்று ஜேக்கப் கூறுகிறார்.

எல்லை தொடர்பான பிரச்னையை எல்லையில்தான் தீர்க்க வேண்டும் என்கிறார் அவர்.

ஜி20 குழுவிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இதுவரை ஜி20 அமைப்பின் டஜன் கணக்கான கூட்டங்கள் நடந்துள்ளன.

இதன்போது எந்தவொரு யோசனையும் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் சீனாவின் நிலைப்பாடு, இந்தியா உட்பட உலகம் முழுவதற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

“ஜி20 என்பது உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் அமைப்பு. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். அத்தகைய சூழ்நிலையில் ஜி20இல் சீனாவின் எதிர்மறையான அணுகுமுறை, ஜி20 உறுப்பு நாடுகளைப் போலவே அதையும் தொந்தரவு செய்யும்.

மேற்கத்திய நாடுகள் பல சந்தர்பங்களில் சீனா மீது கோபம் கொண்டுள்ளன. எனவே உலக அரங்கில் தன் மீது குறிவைக்கப்படும் அளவிற்கு எந்த செயலிலும் சீனா ஈடுபடாது,” என்று டாக்டர் ஸ்வர்ண சிங் கூறுகிறார்.

ஜி20 மற்றும் சீனாவை பற்றிப் பேசிய பேராசிரியர் ஜேக்கப், “இதுபோன்ற பலதரப்பு சந்திப்பில் சீனா உட்பட ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலனை முன்வைக்க முயற்சி எடுக்கும். எனவே இங்கு இருதரப்பு உறவுகளைவிட பலதரப்பு உறவுகளில் கவனம் செலுத்தப்படுகிறது,” என்றார்.

பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் முறைசாரா சந்திப்புகள், வூஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நடந்தன.

இந்தச் சந்திப்புக்ோளின்போது இரு தலைவர்களுக்கும் இடையே வெளிப்படையான உரையாடல் நடந்தது. ஆனால் இரு நாடுகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா, சீனா இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்த காரணத்தால் இதுபோன்ற முறைசாரா சந்திப்புகள் நின்று போயுள்ளன.

எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே பலமுறை வன்முறை மோதல்களும் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டரில் உள்ள யாங்சேயில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சில இந்திய வீரர்கள் காயமடைந்தனர்.

அதற்கு முன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லையில் பதற்றம் நிலவி வரும் அதே நேரம் இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் சாதனை அளவை எட்டியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 135.98 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று சீனாவின் சுங்கத் துறை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதை 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.4 சதவீதம் அதிகம். 2021ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 125.62 பில்லியன் டாலராக இருந்தது.

சீனப் பொருட்களின் ஏற்றுமதி 2022ஆம் ஆண்டில் 21.7% அதிகரித்து 118.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதேவேளையில் இறக்குமதியில் 37.9 சதவீதம் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகை 17.48 பில்லியன் டாலர்களாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.