செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? !!
மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் (Semiconductor) எனும் மூலப்பொருளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்டு, புதிய திட்டத்தை இந்தியா முன்னெடுத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது.
செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அல்லது மானியம் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும், இந்தத் திட்டம் இதுநாள்வரை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் பிரபலமான அமெரிக்க நிறுவனமான மைக்ரான், இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் முதலீட்டில் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே, தாய்வானை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவின் வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து 19.5 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில், இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்ற தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.
இதேபோன்று, வேறு இரண்டு நிறுவனங்களின் திட்டங்களும் முடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால், இந்தியாவில் சிப் உற்பத்தி ஆலையை நிறுவ முன்வரும் பெரிய நிறுவனங்களுக்காக, பத்து பில்லியன் டாலர்கள் ஊக்கத்தொகையுடன் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு காத்திருக்கிறது. இதன் மூலம் இந்த தொழில் துறையில் ஓர் உறுதியான நிலைப்பாட்டை கொண்டு வரும் நோக்கில், தொழில்நுட்பக் கூட்டு மேலாண்மையை உருவாக்கி வருகிறது.
செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் iCET ( Critical and Emerging Technology) நிறுவனத்துடன் இந்தியா அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜப்பானுடனும் கடந்த வாரம் அதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், குறைந்தது மூன்று மாநிலங்கள், செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் முதலீடுகளை தக்கவைத்து கொள்ளும் நோக்கில் தனித்தனி கொள்கைகளை அறிவித்துள்ளன.
இவ்வாறு அரசு அளிக்கும் மானியங்கள் மற்றும் வகுக்கும் கொள்கைகள் இந்த துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். ஆனால் அதேநேரம், செமிகண்டக்டர் சிப் உற்பத்தியின் மையமாக இந்தியா மாறுவதற்கு, கொள்கை மற்றும் மானியத்துடன் தொழில்நுட்ப பரிமாற்றமும் முக்கியமான தேவையாக உள்ளது என்கிறார் ‘கார்னகி இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த அறிஞரான கோனார்க் பண்டாரி.
தொழில்நுட்பம், பாதுகாப்பு, அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் தன்னார்வ அமைப்பான கார்னகியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
“தொழில் தொடங்குவதற்கு சாதகமான வணிகச் சூழல், அதற்கான உள்கட்டமைப்பு வசதி, மனிதத் திறன், உள்நாட்டுச் சந்தையின் தேவை, ஏற்றுமதி வாய்ப்பு ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டே பன்னாட்டு நிறுவனங்கள் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை ஒரு நாட்டில் நிறுவுவது குறித்த முடிவுகளை எடுக்கின்றன” என்று பண்டாரி கூறுகிறார்.
செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க, பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது
இந்தியாவின் சாதகமான அம்சங்கள்
சிறிய ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் இணையத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் பெரிய தரவு மையங்கள் வரை, இன்றைய நவீன உலகின் ஒவ்வொரு அம்சத்திலும் செமிகண்டக்டர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்னணு வாகனங்கள் உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளிலும், மேம்படுத்தப்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்பம் பிரதான பங்கை கொண்டுள்ளது.
உலக அளவிலான செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. இது 2026 இல் இருமடங்காக உயரக்கூடும் என்று பன்னாட்டு தணிக்கை நிறுவனமான டெலாய்ட் மதிப்பிட்டுள்ளது.
ஆனால் உற்பத்தி மேம்பாடு, வடிவமைப்பு, சோதனை, பேக்கேஜிங் என சிப்கள் உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. இவற்றில் வடிவமைப்பு செயல்பாட்டில் மட்டும் இந்தியா தற்போது வலுவாக உள்ளது. ஆனால் உற்பத்தி என்று வரும்போது அனைத்து காரணிகளிலும் சிறப்பாக இருப்பது அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.
உலக அளவில் உள்ள சிப் வடிவமைப்பாளர்களில் இந்தியாவில் மட்டும் 20 சதவீதம் பேர் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர் என்று டெலாய்ட்டின் பங்குதாரரான கதிர் தாண்டவர்யன் பிபிசியிடம் கூறினார்.
Intel, AMD, Qualcomm போன்ற பெரும்பாலான செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை இந்தியாவில் நிறுவி உள்ளன. இந்திய பொறியாளர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள இந்நிறுவனங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.
செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் முதலீடுகள் வர துவங்கும்போது, அதன் பல்வேறு நிலைகளில் பணியாற்ற சுமார் 2.5 லட்சம் பேர் தேவைப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திறன்மிக்க பணியாளர்களை பெறுவது நிறுவனங்களுக்கு சவாலான விஷயமாக இருப்பதால், இத்தொழில் துறைக்கும், அதைச்சார்ந்த பயிற்சிக்குமான ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும்.
இதை கருத்தில் கொண்டே, ‘சிப்ஸ் டு ஸ்டார்ட்அப்’ (Chips to Startup) திட்டத்தின் மூலம் 85 ஆயிரம் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மின்சாரம், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், பணித்திறன் உள்ளிட்டவையும் செமிகண்டக்டர் உற்பத்தித் துறை வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த காரணிகளில் இந்தியா அடைந்துவரும் முன்னேற்றம், இத்துறையில் நிலவி வரும் உலகளாவிய போட்டியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தி உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
செமிகண்டக்டர் உற்பத்தித் துறை சார்ந்த பணிகளை தருவதற்கு (outsourcing), சீனாவுக்கு மாற்றாக ஓரிடத்தை அமெரிக்கா தேடி வருகிறது. அமெரிக்காவின் இந்த தேடலில். புவிசார் அரசியலும் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது என்கிறார் தாண்டவர்யன்.
இந்தியாவில் நிலவும் சிக்கலான வணிகச் சூழல், செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் உலகளாவிய போட்டியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.
கணினி மென்பொருள் (சாஃப்ட்வேர்) துறையில் வல்லமைமிக்க நாடாக திகழும் இந்தியா, வன்பொருள் துறையில் (Hardware) திறன்மிக்கதாக இல்லை என்பதே உண்மை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), உற்பத்தித் துறையின் பங்கு பல ஆண்டுகளாக தேக்க நிலையில் தான் உள்ளது.
இந்த நிலையை மாற்றுவதற்கும், செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் உள்ள உலக அளவில் போட்டியை சமாளிப்பதற்கும் தேவையான “அடிப்படை மற்றும் நீடித்த சீர்திருத்தங்களை” இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
“சுங்க கட்டணங்கள், வரி விதிப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முதலீட்டுக்கு தடையாக இருக்கும் அம்சங்களை களைவதும் இந்த சீர்திருத்தங்களில் அடங்கும்” என்று அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பின் நிர்வாகி ஸ்டீபன் எசல் பிபிசியிடம் கூறினார்.
இதற்கு மாறாக, “செமிகண்டக்டர் சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அல்லது மானியம் அளிப்பது இந்தியாவின் முதன்மை உத்தியாக இருந்தால், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்காவுடன் இந்தத் துறையில் நீண்ட காலத்திற்கு இந்தியாவால் போட்டியிட முடியாது” என்றும் கூறுகிறார் அவர்.
இந்தியாவில் தொழில் தொடங்க வரும் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையை போலவோ அல்லது அதற்கு அதிகமாகவோ அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அளித்து வருகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
மைக்ரான் நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கவுள்ள தொழில்நுட்பம் குறித்து கடந்த மாதம் விளக்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
“செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் ஏற்கனவே விநியோகிஸ்தர்கள், வணிக பங்குதாரர்கள், நுகர்வோர், தளவாட போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கொண்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், அரசு வழங்கும் மானியம் அல்லது ஊக்கத்தொகைக்காக தங்களின் வணிக செயல்பாடுகளுக்கான இடத்தை மாற்றாது” என்கிறார் பண்டாரி.
ஆனாலும், இத்துறையின் ஒவ்வொரு நிலையிலும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தியாவில் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலாக, இத்துறை சார்ந்து பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு அதிக நிதியுதவி அளிப்பது, ஏடிபி எனப்படும் செமிகண்டக்டர் உற்பத்தியின் பல்வேறு படிநிலைகள் மற்றும் அதன் வடிவமைப்பில் உள்ள போட்டியை இரட்டிப்பாக அதிகரிக்கும் நோக்கில் முதலீடுகளை செய்யலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.
எவ்வாறாயினும், “இத்துறையில் அதிக போட்டி மனப்பான்மையுடன் இருப்பது, இந்தியாவின் ஒரு பெரிய தொழில்நுட்ப பாய்ச்சலாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் இதில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் முயற்சியும் சரியானதே” என்கிறார் எசெல்.
அதேநேரம், “உள்நாட்டு மின்னணு சாதனங்கள் உற்பத்தி சுமார் 100 பில்லியன் டாலர்களை தொடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவற்றின் உற்பத்தி செயல்முறைக்கு போதிய வசதி இல்லாதது, இத்துறை சார்ந்த இந்தியாவின் இறக்குமதி செலவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கிறார் பண்டாரி.
இதுபோன்ற பாதகமான காரணிகளால், செமிகண்டக்டர் சிப் உற்பத்தி துறையில் இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. இதற்கு கடந்த காலங்களில் நிகழ்ந்த சில தவறுகள் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
“முந்தைய தவறுகளை சரி செய்ய இந்தியாவுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு, புவிசார் அரசியல் தலைவர்கள் இணைந்துள்ளனர். இதன் பயனாக, வன்பொருள் உற்பத்தியை பெருக்க, இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ளலாம் அல்லது மற்றொரு வாய்ப்பை நழுவவிடலாம்” என்கிறார் பண்டாரி.