என்.எல்.சி. முற்றுகை போராட்டத்தில் வன்முறை.. மேற்கொண்ட நடவடிக்கை என்ன? காவல்துறை விளக்கம்!!
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், பாமக போராட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சுமார் 900 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முயன்ற 2000 பாமகவினர் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை கூறியுள்ளது.