எழும்பூரில் ஒரே ரோட்டில் 2 மதுக்கடைகள்: பட்டப்பகலில் சாலையோரம் நின்று மதுஅருந்தும் குடிமகன்கள்!!
சென்னையின் இதயம் போன்ற பகுதியாக விளங்கி வரும் எழும்பூரில் சென்ட்ரலுக்கு அடுத்து 2-வது பெரிய ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தென் மாவட்டம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புறநகர் ரெயில் சேவை மற்றும் மெட்ரோ ரெயில் நிலையமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இதனால் 24 மணி நேரமும் எழும்பூர் ரெயில் நிலையம் பரபரப்பாக இருக்கும். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். ரெயில் நிலையத்தை சுற்றிலும் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் கடைகள் உள்ளன. ஆனால் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரே ரோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் இருப்பதுதான் வேதனை அளிப்பதாக உள்ளது. ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் அன்னை ஈ.வி.ஆர்.மணியம்மையார் சாலையில் ஒரு கடையும், அதே சாலையில் மறு முனையில் மற்றொரு கடையும் இயங்குகிறது.
ரெயில் நிலையத்துக்கு வரும் வெளியூர் பயணிகள் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த குடிமகன்கள் இந்த கடைகளில்தான் மது வாங்குகிறார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் ரோட்டோரம் நின்று மது குடிப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடையை சுற்றியுள்ள பகுதிகளை அவர்கள் திறந்தவெளி ‘பார்’ஆக பயன்படுத்தி வருகின்றனர். மாலை முதல் இரவு வரை வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களும் இந்த ரோட்டில் நின்றுதான் பயணிகளை ஏற்றி செல்கின்றன. எந்தவித கூச்சமும் இன்றி ‘ஹாயாக’ சரக்கு அடிக்கும் மது பிரியர்களை பார்த்து பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் முகம் சுழித்து வருகிறார்கள்.
இதனை பார்த்து தங்கள் குழந்தைகளும் கெட்டுப் போக வாய்ப்பு இருப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்குத்தான் திறப்பது வழக்கம். ஆனால் அதற்கு முன்பே ஏராளமான மது பிரியர்கள் கடை முன்பு காத்து நிற்கிறார்கள். கடை திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு அவர்கள் மது பாட்டில்களை வாங்கி கொண்டு செல்கிறார்கள். தினமும் நாம் இந்த காட்சிகளை பார்க்கலாம். சரக்கு பாட்டிலை வாங்கியவர்கள் அங்குள்ள பாரிலோ அல்லது மறைவான இடத்திலோ நின்று மது அருந்தினால் பரவாயில்லை.
ஆனால் இதற்கு நேர் மாறாக குடிமகன்கள் ரோட்டோரம் கூட்டமாக நின்று கொண்டு மது குடித்தும், வாயில் சிகரெட் புகையை ஊதிக் கொண்டும் அட்டகாசம் செய்து வருகிறார்கள். ரோட்டோரம் ஆங்காங்கே நின்று மதுவை டம்ளரில் ஊற்றி குடிப்பதும், சிலர் பாட்டிலோடு அப்படியே குடிப்பதையும் கண்கூடாக பார்க்கலாம். பொது இடங்களில் மது குடிக்கவோ புகை பிடிக்கவோ கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இதை காற்றில் பறக்க விட்டுவிட்டு இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடிப்பதோடு மட்டுமல்லாமல் மது பாட்டில்களை அவர்கள் அப்படியே ரோட்டில் வீசி எறிகின்றனர். இதனால் காலை நேரம் அந்த ரோடு முழுவதும் மது பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.
சில பாட்டில்கள் உடைந்து சிதறி கிடப்பதால் அதை கவனிக்காமல் செல்லும் பொதுமக்களின் கால்களை அது பதம் பார்த்து வருகின்றன. இதை தவிர குடிமகன்கள் போதையில் ரோட்டோரமே சிறுநீரும் கழித்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார கேடு ஏற்படு வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. குடிகாரர்கள் என்பதால் நமக்கு ஏன் வீண் வம்பு என பொதுமக்கள் கண்டும் காணாமல் சென்று விடுவதால் நாள்தோறும் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த கும்பலால் சமூக விரோத செயல்களும் அதிகரிப்பதற்கான அபாய நிலை உள்ளது. பொது மக்களும், வாகன ஓட்டிகளும் ஒருவித அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே இந்த மதுக்கடைகளை அகற்றி ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்வதற்கு முன் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.